பூங்கா நிலத்தில் ஓட்டல் கட்ட ஒப்புதல் பெற்று முறைகேடு; ரவீந்திர வாய்கர் எம்.எல்.ஏ.விடம் போலீசார் 6 மணி நேரம் விசாரணை

பூங்கா நிலத்தில் ஓட்டல் கட்ட ஒப்புதல் பெற்று முறைகேடில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பாக ரவீந்திர வாய்கர் எம்.எல்.ஏ.விடம் போலீசார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
மும்பை,
பூங்கா நிலத்தில் ஓட்டல் கட்ட ஒப்புதல் பெற்று முறைகேடில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பாக ரவீந்திர வாய்கர் எம்.எல்.ஏ.விடம் போலீசார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
முறைகேடாக ஒப்புதல்
சிவசேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே எம்.எல்.ஏ. ரவீந்திர வாய்கர். இவர் மாநகராட்சி பூங்காவுக்கு ஒதுக்கிய நிலத்தில் 5 நட்சத்திர ஓட்டல் கட்ட முறைகேடாக ஒப்புதல் பெற்றதாக பா.ஜனதா முன்னாள் எம்.பி. கிரித் சோமையா குற்றம்சாட்டி இருந்தார். முறைகேடாக பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் ஓட்டல் கட்ட உரிமம் பெற்றதில் ரூ.500 கோடி ஊழல் நடந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இந்த குற்றச்சாட்டு குறித்து கிரித் சோமையா மும்பை போலீசில் புகார் அளித்து உள்ளார். கிரித் சோமையா புகார் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அவர்கள் மும்பை மாநகராட்சி பூங்கா துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.
6 மணிநேரம் விசாரணை
மேலும் நேற்று முறைகேடு புகார் தொடர்பாக ரவீந்திர வாய்கரிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்காக அவர் நேற்று காலை 11 மணியளவில் மும்பை கமிஷனர் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டார். விசாரணை சுமார் 6 மணி நேரம் நடந்தது. விசாரணை முடிந்து மாலை 5 மணியளவில் அங்கு இருந்து புறப்பட்டார். விசாரணை தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், " எங்களுக்கு வரும் எல்லா புகார் குறித்தும் முதல் கட்ட விசாரணை நடத்துவோம். இந்த வழக்கிலும் அதுபோன்ற விசாரணை தான் நடந்து வருகிறது. இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை " என்றார். ரவீந்திர வாய்கர் 2009-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 முறை ஜோகேஷ்வரி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். 2014-2019-ம் ஆண்டு வரை மந்திரியாக இருந்தார். 1992 முதல் 2010 வரை கவுன்சிலராகவும், மாநகராட்சி நிலைக்குழு தலைவராகவும் இருந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






