சிவசேனாவில் 2-ம் கட்ட தலைவர்களுக்கு முக்கிய பொறுப்பு- உத்தவ் தாக்கரே நடவடிக்கை

முக்கிய தலைவர்கள் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவிய நிலையில், சிவசேனாவில் 2-ம் கட்ட தலைவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கி உத்தவ் தாக்கரே நடவடிக்கை எடுத்து உள்ளார்.
மும்பை,
முக்கிய தலைவர்கள் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவிய நிலையில், சிவசேனாவில் 2-ம் கட்ட தலைவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கி உத்தவ் தாக்கரே நடவடிக்கை எடுத்து உள்ளார்.
கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம்
மராட்டியத்தில் பலம் வாய்ந்த கட்சியான சிவசேனா ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே அணி என 2 ஆக உடைந்து உள்ளது. ஏக்நாத் ஷிண்டேவிடம் 40 எம்.எல்.ஏ.க்கள், சில எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள் பலர் உள்ளனர். அதே நேரத்தில் அடிமட்ட தொண்டர்கள் உத்தவ் தாக்கரேவின் பின்னால் இருப்பார்கள் என நம்பப்படுகிறது.
இதில் ஏக்நாத் ஷிண்டே அணியில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், முன்னாள் கவுன்சிலர்களை கட்சி பொறுப்பில் இருந்து உத்தவ் தாக்கரே நீக்கினார். இதேபோல ஏக்நாத் ஷிண்டே அணியில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்களும் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
புது முகங்களுக்கு வாய்ப்பு
இந்தநிலையில் உத்தவ் தாக்கரே கட்சியை மீண்டும் கட்டமைக்கும் வகையில் மும்பை, பால்கர், யவத்மால், அமராவதி உள்ளிட்ட மாவட்டங்களில் புதிதாக 100-க்கும் அதிகமான நிர்வாகிகளை நியமித்து உள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டவர்களின் பெரும்பாலானவர் 2-ம் கட்ட தலைவர்கள் ஆவார். குறிப்பாக மண்டல துணை தலைவர், கிளை தலைவர் (சாக்கா பிரமுக்) போன்ற முக்கிய பொறுப்புகளுக்கு புதிய முகங்களை நியமித்து உள்ளார். அவர் இதுபோன்ற ஒரு நடவடிக்கையில் ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும். புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பான அறிவிப்பு நேற்று சாம்னாவில் வெளியிடப்பட்டது.
தொண்டர்கள் பலம்
இதுகுறித்து சிவசேனா நிர்வாகி ஒருவர் கூறுகையில், " சிவசேனா மற்ற கட்சிகளை போல உருவானது அல்ல. முதலில் இது ஒரு அமைப்பாக தான் இருந்தது. அதன்பிறகு தான் கட்சியாக மாறியது. சிவசேனாவின் உண்மையான பலமே அதன் அடிமட்ட தொண்டர்கள் தான். சாக்கா (கிளை மன்றங்கள்), கிளை தலைவர்கள் மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ளனர். நாங்கள் ஏற்கனவே 2-ம் கட்ட தலைவர்களை அடையாளம் கண்டுவிட்டோம். அவர்கள் கடந்த காலங்கள் அந்த பகுதியில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களால் ஓரங்கட்டப்பட்டவர்கள். கட்சியில் வெற்றிடம் ஏற்படாத வகையில் புதிய நியமனங்கள் படிப்படியாக செய்யப்படும்" என்றார்.






