மும்பை-கோவா நெடுஞ்சாலையில் கியாஸ் டேங்கர் லாரி ஆற்றில் விழுந்தது; டிரைவர் பலி- 25 மணி நேர மீட்பு பணியால் போக்குவரத்து பாதிப்பு


மும்பை-கோவா நெடுஞ்சாலையில் கியாஸ் டேங்கர் லாரி ஆற்றில் விழுந்தது;  டிரைவர் பலி- 25 மணி நேர மீட்பு பணியால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 25 Sep 2022 2:45 AM GMT (Updated: 2022-09-25T08:16:02+05:30)

மும்பை-கோவா நெடுஞ்சாலையில் கியாஸ் டேங்கர் லாரி ஆற்றில் விழுந்த விபத்தில் டிரைவர் பலியானார். 25 மணி நேரம் நடந்த மீட்பு பணியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மும்பை,

மும்பை-கோவா நெடுஞ்சாலையில் கியாஸ் டேங்கர் லாரி ஆற்றில் விழுந்த விபத்தில் டிரைவர் பலியானார். 25 மணி நேரம் நடந்த மீட்பு பணியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கியாஸ் டேங்கர் லாரி

நவிமும்பை உரணில் இருந்து கோவாவிற்கு எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரி ஒன்று சம்பவத்தன்று புறப்பட்டு சென்றது. இந்த லாரியை டிரைவர் ராம்தாஸ் ஜாதவ் (வயது24) ஓட்டிச்சென்றார். மாலை 3 மணி அளவில் ரத்னகிரி மாவட்டம் லாஞ்சா தாலுகாவில் உள்ள அஞ்சனி ஆற்று மேம்பாலத்தில் டேங்கர் லாரி சென்ற போது ஏற்றமான பகுதியில் ஏற முடியாமல் திணறியது.

இருப்பினும் டிரைவர் சமாளித்து லாரியை திருப்ப முயன்ற போது பின்புறமாக இருந்த 17 மில்லியன் லிட்டர் பாரம் கொண்ட கியாஸ் டேங்கருடன் லாரி அஞ்சனி நதியில் தலைகுப்புற விழுந்து விபத்து ஏற்பட்டது.

டிரைவர் பலி

இந்த விபத்தில் டிரைவர் ராம்தாஸ் ஜாதவ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். நதியில் விழுந்த கியாஸ் டேங்கரில் இருந்து கசிவு ஏற்பட்டதால் வெடித்து சிதற வாய்ப்பு இருப்பதாக போலீசார் கருதினர். உடனடியாக மும்பை-கோவா நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு தடை விதித்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் விரைந்தனர்.

லாரியில் சிக்கி உயிரிழந்த டிரைவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

25 மணி நேரம் மீட்பு பணி

டேங்கரில் ஏற்பட்ட கசிவை சரிசெய்ய மீ்ட்பு படையினர் முயன்றனர். இதனை தொடர்ந்து ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு கியாஸ் டேங்கரை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர். சுமார் 25 மணி நேரமாக நடந்த மீட்பு பணியின் காரணமாக மும்பை-கோவா நெடுஞ்சாலையில் வாகனங்கள் பல கி.மீ தூரம் வரையில் அணிவகுத்து நின்றது. வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.


Next Story