ஆட்டோ டிரைவரை கொலை செய்து விபத்து போல சித்தரிப்பு- பக்கத்து வீட்டுக்காரருக்கு வலைவீச்சு

ஆட்டோ டிரைவரை கொலை செய்து விபத்து போல சித்தரித்த பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
வசாய்,
பால்கர் மாவட்டம் வசாய் பகுதியை சேர்ந்த 28 வயது ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது நண்பர்களுடன் விருந்தில் கலந்து கொள்ள சென்றிருந்தார். இதன்பின்னர் சுவர் இடிந்து விழுந்து ஆட்டோ டிரைவர் பலியானதாக அவரது மனைவிக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது அவர் சுவரின் இடிபாடுகளில் பிணமாக கிடந்தார். தகவலின்பேரில் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ஆட்டோ டிரைவரின் முகத்தில் ஒரு காயம் கூட இல்லாததால் அவரது சாவில் சந்தேகம் இருப்பதகாக மனைவி கூறினார். மேலும் இது பற்றி மிராபயந்தர்-வசாய்விரார் போலீசில் அவர் புகார் அளித்தார்.
இதற்கிடையே ஆட்டோ டிரைவரின் மண்டை உடைந்து இருப்பதால் அவர் பலியானதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. மேலும் அவரை விருந்துக்கு பக்கத்து வீட்டுக்காரர் தான் அழைத்து சென்றதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் புகார் ஆகியவற்றின் அடிப்படையில் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.






