காய்கறி வியாபாரியை கொலை செய்த தொழிலாளி கைது

வாஷி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரியை கொலை செய்த தொழிலாளியை போலீசார் உத்தரபிரதேசத்தில் கைது செய்தனர்.
மும்பை,
வாஷி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரியை கொலை செய்த தொழிலாளியை போலீசார் உத்தரபிரதேசத்தில் கைது செய்தனர்.
காய்கறி வியாபாரி
நவிமும்பை வாஷி மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வந்தவர் ராமயன் லால்சா (வயது42). இவர் கடந்த 14-ந் தேதி மதியம் 12 மணியளவில் கடையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். சம்பவம் குறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வாஷி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் அருண் குமார் (32) காய்கறி வியாபாரி ராமயன் லால்சாவை கொலை செய்தது தெரியவந்தது.
அருண் குமார் மதுகுடித்துவிட்டு, ராமயன் லால்சாவின் கடைக்கு செல்வதை வாடிக்கையாக வைத்து உள்ளார். எனவே ராமயன் லால்சா, அருண் குமாரை கண்டித்து இருக்கிறார்.
உ.பி.யில் கைது
சம்பவத்தன்றும் அவர் மதுகுடித்துவிட்டு காய்கறி கடைக்கு சென்றார். அப்போது மதுகுடித்துவிட்டு ஏன் கடைக்கு வருகிறாய் என ராமயன் லால்சா அவரை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர், காய்கறி கடைக்காரரை கல்லால் தலையில் அடித்து கொலை செய்துவிட்டு உத்தரபிரதேசத்துக்கு தப்பி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து உத்தரபிரதேசம் சென்ற போலீசாா் அங்கு தலைமறைவாக இருந்த அருண்குமாரை கைது செய்து நவிமும்பை அழைத்து வந்தனர்.






