வாடகைதாரர்களின் விவரங்களை வீட்டு உரிமையாளர்கள் அளிக்க வேண்டும்; போலீசார் வலியுறுத்தல்
மும்பையில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களின் விவரங்களை அளிக்க வேண்டும் என்று போலீசார் வலியுறுத்தினர்.
மும்பை,
மும்பையில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களின் விவரங்களை அளிக்க வேண்டும் என்று போலீசார் வலியுறுத்தினர்.
உயிருக்கு ஆபத்து
நாட்டின் நிதி தலைநகரான மும்பை பயங்கரவாதிகளின் கழுகு கண் பார்வையில் இருந்து வருகிறது. ஏற்கனவே பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களையும் சந்தித்துள்ளது. இந்த நிலையில் மும்பை போலீசார் நேற்று உத்தரவு ஒன்றை வெளியிட்டு உள்ளனர். இதில் கூறியிருப்பதாவது:- பயங்கரவாத அல்லது சமூக விரோத கும்பல் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் மறைவிடம் தேடக்கூடும் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதன்காரணமாக மனித உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்படுவதுடன், தனியார் அல்லது பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதுமட்டும் இல்லாமல் அவர்களால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படக்கூடும். பயங்கரவாதிகள் வாடகைதாரர்கள் போன்ற போர்வையில் நாசவேலைகள், கலவரங்கள் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்க வாடகைக்கு விடப்பட்டுள்ள இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.
வெளிநாட்டவர்கள்
எனவே மும்பை போலீசாரின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட நில உரிமையாளர்கள், வீட்டு உரிமையாளர்கள் தாங்கள் வாடகைக்கு விட்டுள்ளவர்களின் விவரங்களை அரசின் இணைய தள 'சிட்டிசன்' போர்டலில் பதிவேற்றம் செய்ய வேண்டும். வாடகைக்கு விடப்பட்டவர்கள் வெளிநாட்டவராக இருந்தால் அவர்களின் பெயர், எந்த நாட்டைசேர்ந்தவர்கள், பாஸ்போர்ட்டு விவரம், அவர்கள் தங்கி உள்ளதற்கான காரணம் உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த உத்தரவை பின்பற்ற தவறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது. நவம்பர் 7-ந் தேதி வரை 60 நாட்கள் வீட்டு உரிமையாளர்கள் இணைய தள போர்டலில் பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.