மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை- தானே கோர்ட்டு தீர்ப்பு

விவாகரத்து தர மறுத்த மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தானே கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
தானே,
விவாகரத்து தர மறுத்த மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தானே கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
போலீசில் புகார்
மும்பை ஒர்லி பி.டி.டி. சால் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ் (வயது41). முன்னாள் போலீஸ் அதிகாரியின் மகனான இவர் நவிமும்பையில் ஆட்டோ மொபைல் ஷோரூமில் வேலை பார்த்து வந்தார். இவர் விளம்பர நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சவிதா (வயது32) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தினசரி வேலைக்கு செல்லும் முன்பு சவிதாவை நிறுவனத்தில் இறங்கி விட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் ராகேஷ் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ந் தேதி தனது மனைவி காணாமல் போனதாக நவிமும்பை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சவிதாவை தேடி வந்தனர். மறுநாள் நவிமும்பை என்.ஆர்.ஐ. காலனி பகுதியில் சவிதாவின் உடல் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
கள்ளத்தொடர்பு
போலீசார் அங்கு சென்று பார்த்த போது தலை நசுக்கப்பட்டு கிடந்ததால் கொலை செய்த சம்பவம் தெரியவந்தது. இதனால் கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் கணவர் ராகேஷ் உள்பட பலரிடம் விசாரித்தனர். இதில் ராகேசுக்கு வேறொரு பெண்ணிடம் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதனால் காதல் மனைவியான சவிதாவிடம் வாழ பிடிக்காமல் விவகாரத்து தரும்படி கேட்டு உள்ளார். இதற்கு அவர் மறுத்ததால் கொலை செய்ததாக தெரியவந்தது.
ஆயுள் தண்டனை
இதனால் போலீசார் ராகேசை கைது செய்து தானே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
மாவட்ட கூடுதல் செசன்ஸ் நீதிபதி ரச்சனா முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. வழக்கில் 23 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர் மீதான குற்றம் நிரூபணமானது. இதனை தொடர்ந்து ராகேசுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.






