இந்திய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் மும்பை ஐ.ஐ.டி. முதல் இடம் - அண்ணா பல்கலைக்கழகம் 10-வது இடத்தை பிடித்தது

கியூ.எஸ். நிறுவனம் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. அதில் இந்திய அளவில் மும்பை ஐ.ஐ.டி.க்கு முதல் இடமும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 10-வது இடமும் கிடைத்துள்ளது.
மும்பை,
கியூ.எஸ். நிறுவனம் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. அதில் இந்திய அளவில் மும்பை ஐ.ஐ.டி.க்கு முதல் இடமும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 10-வது இடமும் கிடைத்துள்ளது.
கியூ.எஸ். நிறுவனம்
லண்டனை சேர்ந்த 'கியூ.எஸ்.' என்ற நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு கல்வி நிறுவனங்களின் நன்மதிப்பு, அவர்கள் வழங்கும் கல்வியின் தரம், அங்கு ஆசிரியர்-மாணவர் விகிதம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மதிப்பெண் வழங்கி அதன் அடிப்படையில் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிடுகிறது. அந்த வகையில் 20-வது பதிப்பாக கியூ.எஸ். உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியல்-2024-ஐ அந்த நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பியா, அமெரிக்கா, ஓசினியா போன்ற மண்டலங்களில் 104 பகுதிகளில் உள்ள 1,500-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் இதில் பங்கேற்றன.
அண்ணா பல்கலைக்கழகம்
இதில் இந்திய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களாக மொத்தம் 45 நிறுவனங்கள் இடம்பெற்று இருக்கின்றன. அதில் மும்பை ஐ.ஐ.டி. முதலிடத்தை பெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக டெல்லி ஐ.ஐ.டி., பெங்களூரு ஐ.ஐ.எஸ்., காரக்பூர் ஐ.ஐ.டி., கான்பூர் ஐ.ஐ.டி., சென்னை ஐ.ஐ.டி., கவுகாத்தி ஐ.ஐ.டி., ரூர்கே ஐ.ஐ.டி., டெல்லி பல்கலைக்கழகங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த வரிசையில் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் 10-வது இடத்திலும், சென்னை பல்கலைக்கழகம் 12-வது இடத்திலும் இருக்கிறது.
பின்னுக்கு தள்ளப்பட்ட சென்னை ஐ.ஐ.டி.
உலக அளவில் பார்க்கும் போது மும்பை ஐ.ஐ.டி. 149-வது இடத்திலும், சென்னை ஐ.ஐ.டி. 285-வது இடத்திலும், அண்ணா பல்கலைக்கழகம் 427-வது இடத்திலும், சென்னை பல்கலைக்கழகம் 526-வது இடத்திலும் உள்ளது. இதில் மும்பை ஐ.ஐ.டி. கடந்த ஆண்டை விட முன்னேறி இருப்பதையும், சென்னை ஐ.ஐ.டி. தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்டு இருப்பதையும் (கடந்த ஆண்டு 250-வது இடம்) புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதே போல் மற்ற கல்வி நிறுவனங்களும் கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில் தரவரிசையில் பின் தங்கியிருக்கிறது. இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு பெங்களூரு ஐ.ஐ.எஸ். 147-வது இடத்தில் இருந்தது. அதன் பிறகு மும்பை ஐ.ஐ.டி. தற்போது 150-வது இடத்துக்குள் வந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.






