விதவை பெண்களை "கங்கா பாகீரதி" என்று அழைக்க மந்திரி வேண்டுகோள்

விதவை பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் அவர்களை “கங்கா பாகீரதி” என்று அழைக்க வேண்டும் என்று மந்திரி மங்கள் பிரபாத் லோதா வலியுறுத்தி உள்ளார்.
மும்பை,
விதவை பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் அவர்களை "கங்கா பாகீரதி" என்று அழைக்க வேண்டும் என்று மந்திரி மங்கள் பிரபாத் லோதா வலியுறுத்தி உள்ளார். இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
"கங்கா பாகீரதி"
மராட்டிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி மங்கள் பிரபாத் லோதா, விதவைகளுக்கு மரியாதை அளிக்கும் வகையில் அவர்களை "கங்கா பாகீரதி" என்று அழைக்கவேண்டும் என்ற திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.
இதுகுறித்து தனது துறையை சேர்ந்த முதன்மை செயலாளருக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி மாற்றுத்திறனாளிகளை "திவ்யாங்" என்று குறிப்பிடும்படி பரிந்துரைத்தார். அந்த முடிவு சமுதாயத்தில் மாற்றுதிறனாளிகள் மரியாதை பெறுவதற்கு வழிவகுத்தது. தற்போது "திவ்யாங்" மக்கள் மீதான சமுதாயத்தின் கண்ணோட்டம் வெகுவாக மாறிவிட்டது. அதே பாணியில் "கங்கா பாகீரதி" என்ற வார்த்தையை விதவைகளுக்கு பயன்படுத்துவது குறித்த விரிவான முன்மொழிவை தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கடிதத்தில் கூறிருந்தார்.
எதிர்ப்பு
இந்த கடிதம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி பேசுபொருளாகி உள்ளது. சில சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண் உரிமை ஆர்வலர்கள் மந்திரியின் கருத்தை கடுமையாக விமர்சித்ததுடன், அதற்கு கண்டனமும் தெரிவித்து உள்ளனர்.
அவர்கள் இதுபோன்ற தேவையற்ற முடிவுகளை விட பெண்களுக்கு சம உரிமைகள் மற்றும் சமூக பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். இந்த முடிவை கைவிட வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலேவும் வலியுறுத்தி உள்ளார்.
இந்தநிலையில் வீடியோ மூலம் இதற்கு பதிலளித்த மந்திர மங்கள் பிரபாத் லோதா, "இந்த முடிவு வெறும் பரிசீலனையில் மட்டுமே உள்ளது. முழுமையாக விவாதிக்கப்படும் வரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படாது என்று நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.






