அதிக உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க வேண்டும்- தொண்டர்களுக்கு உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

அதிக உறுப்பினர்களை கட்சியில் சேர்க்குமாறு தொண்டர்களுக்கு உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.
மும்பை,
அதிக உறுப்பினர்களை கட்சியில் சேர்க்குமாறு தொண்டர்களுக்கு உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.
சிவசேனா சின்னம்
சிவசேனா சின்னத்துக்கு உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணியினர் தேர்தல் ஆணையத்தில் உரிமை கோரி உள்ளனர். இதையடுத்து தங்களுக்கு கட்சியில் உள்ள ஆதரவு குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 40 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 12 எம்.பி.க்கள் ஏக்நாத் ஷிண்டே அணியில் உள்ளனர். எனவே உத்தவ் தாக்கரே, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஆதரவு பிராமண பத்திரங்களை மட்டுமே நம்பி உள்ளார்.
இந்தநிலையில் உத்தவ் தாக்கரே இன்று மாதோஸ்ரீயில் சிவசேனா தொண்டர்கள் மத்தியில் ேபசினார்.
தொண்டர்களுக்கு கோரிக்கை
அப்போது அவர் கூறியதாவது:-
நமது கட்சியில் புதிய உறுப்பினர்கள் அதிக அளவில் சேர்க்கப்பட வேண்டும். யாரும் சிவசேனாவை சீண்ட பயப்படும் அளவுக்கு உறுப்பினர்கள் சேர்க்கை புதிய உச்சத்தை தொட வேண்டும். தேர்தல் ஆணையம் நம்மிடம் உள்ள உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் ஆதரவு பிரமாண பத்திரங்களை கேட்கும். உறுப்பினர்கள் 10 மடங்கு அதிகரிக்க வேண்டும். நாசிக்கில் மட்டும் ஒரு லட்சத்தை தாண்ட வேண்டும்.
உறுப்பினர் சோ்க்கைக்காக அவர்கள் (ஷிண்டே அணி) தொழில்முறை வல்லுநர்களை ஈடுபடுத்தி வருகின்றனர். ஆனால் எனக்கு நீங்கள் (தொண்டர்கள்) மட்டுமே உள்ளீர்கள். காவி கொடியை இறுக்கமாக பிடித்து கொள்ளுங்கள். பறிக்க அல்ல, அதை தொட்டால் கூட கைகள் உடையும் என்ற பயம் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.






