நவிமும்பையில் 2 குழந்தைகளை கழுத்தறுத்து கொன்று தாய் தற்கொலை முயற்சி

நவிமும்பையில் 2 பிள்ளைகளை கழுத்தை அறுத்து கொலை செய்து, தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்து உள்ளது. இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை,
நவிமும்பையில் 2 பிள்ளைகளை கழுத்தை அறுத்து கொலை செய்து, தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்து உள்ளது. இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்
நவிமும்பை கன்சோலி பகுதியை சேர்ந்த பெண் புஷ்பா(வயது32). நேற்று முன்தினம் புஷ்பாவின் கணவர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் அவரது 4 வயது மகள் மற்றும் ஒரு வயது மகன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதேபோல புஷ்பா கை அறுக்கப்பட்ட நிலையில் மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதுகுறித்து ரபாலே போலீசாருக்கு தகவல் கொடுத்த கணவர், மனைவி மற்றும் பிள்ளைகளை வாஷியில் உள்ள மாநகராட்சி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
கொலை வழக்கு பதிவு
அங்கு 4 வயது மகள், ஒரு வயது மகன் ஏற்கனவே இறந்துவிட்டதை டாக்டர்கள் உறுதி செய்தனர். கையில் வெட்டு காயங்களுடன் இருந்த மனைவிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்தநிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், புஷ்பா 2 பிள்ளைகளையும் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அவர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் புஷ்பா மீது கொலை வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவர் குணமாகி வீடு திரும்பிய பின் கொலை வழக்கில் அவர் கைது செய்யப்படுவார் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
மேலும் புஷ்பா பிள்ளைகளை கொலை செய்து தற்கொலை செய்ய முயன்றதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






