'சஞ்சய் ராவத் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அல்ல'- நானா படோலே பதிலடி

எங்கள் கட்சியின் தலைமை குறித்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சஞ்சய் ராவத் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அல்ல என நானா படோலே கூறியுள்ளார்.
மும்பை,
எங்கள் கட்சியின் தலைமை குறித்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சஞ்சய் ராவத் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அல்ல என நானா படோலே கூறியுள்ளார்.
சஞ்சய் ராவத் கருத்து
உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சி தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமை குறித்து பேசியது மகா விகாஸ் அகாடி கூட்டணியில் மீண்டும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது. "காங்கிரஸ் கட்சியின் அனைத்து இறுதி முடிவுகளையும் ராகுல்காந்தி தான் எடுக்கிறார். இருப்பினும் கட்சியின் தேசிய தலைவர் பதவியில் மட்டும் மல்லிகார்ஜூன கார்கே அமர வைக்கப்பட்டு உள்ளார்" என்று தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் சஞ்சய் ராவத்தின் இந்த பேச்சு குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் நானா படோலே செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தலையிடக்கூடாது
உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சி தலைவர் மற்ற கட்சிகளின் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்த வேண்டும். சஞ்சய் ராவத் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அல்ல. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் திறன் குறித்து அவர் எப்படி கேள்வி எழுப்ப முடியும்? ராகுல் காந்தியின் குடும்பத்தினர் மீது இப்படி பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவது தவறானது. எங்கள் கட்சியின் விவகாரங்களில் சஞ்சய் ராவத் தலையிடக்கூடாது என்று நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பேச விரும்பவில்லை...
இதற்கு பதிலளித்த சஞ்சய் ராவத், "நானா படோலோவின் கட்சியை பற்றி யாரும் பேசவில்லை. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் காங்கிரஸ் கட்சியை பற்றி புத்தகத்தில் தெளிவாக கூறியுள்ளார். நாங்கள் உங்களை(நானா படோலே) பற்றி பேச தொடங்கினால், யார் எப்படிப்பட்டவர்கள் என்பது தெரியவரும். அவரை பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை" என்றார். வரும் தேர்தலில் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஒன்றாக போட்டியிட திட்டமிட்டு உள்ள நிலையில் கூட்டணிக்குள் மோதல்கள் வெடித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






