மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு மவுனம் காப்பது ஏன்? தேசியவாத காங்கிரஸ் கேள்வி

அருணாசல பிரதேசத்தின் 11 இடங்களுக்கு சீனா பெயர் சூட்டிய விவகாரத்தில் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு மவுனம் காப்பது ஏன்? என தேசியவாத காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.
மும்பை,
அருணாசல பிரதேசத்தின் 11 இடங்களுக்கு சீனா பெயர் சூட்டிய விவகாரத்தில் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு மவுனம் காப்பது ஏன்? என தேசியவாத காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.
11 இடங்களுக்கு பெயர் சூட்டிய சீனா
சீனாவின் எல்லை பகுதியில் அருணாசல பிரதேச மாநிலம் அமைந்துள்ளது. அருணாசல பிரதேசத்தை சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில், அந்த மாநிலத்தின் 11 இடங்களுக்கு தற்போது சீனா பெயர் சூட்டி சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இந்த விவகாரத்தில் அருணாசல பிரதேசத்தை சேர்ந்த மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜுவுக்கு தேசியவாத காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கிளைட் கிராஸ்டோ கூறியதாவது:-
குரல் கொடுக்க வேண்டும்
அருணாசல பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக்கு சீனா பெயர் சூட்டிய விவகாரத்தில் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு மவுனம் காப்பது ஏன்?. அவர் பேசுவதற்கு பயப்படுகிறாரா?. அவர் அருணாசல பிரதேசத்தை சேர்ந்த எம்.பி. என்பதால் சீனாவுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடிய கடமை அவருக்கு உள்ளது.
கிரண் ரிஜிஜு எம்.பி. என்ற முறையில் தனது கடமையில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் அவர் சார்ந்த மாநிலத்திற்கு எதிராக சீனா செய்யும் அனைத்து தவறுகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






