மாநகராட்சி தேர்தலில் டிக்கெட் தருவதாக கூறி பெண் கற்பழிப்பு- நவநிர்மாண் சேனா பிரமுகர் கைது

மாநகராட்சி தேர்தலில் டிக்கெட் வழங்குவதாக கூறி பெண்ணை கற்பழித்த நவநிர்மாண் சேனா கட்சி பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மாநகராட்சி தேர்தலில் டிக்கெட் வழங்குவதாக கூறி பெண்ணை கற்பழித்த நவநிர்மாண் சேனா கட்சி பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
கற்பழிப்பு
மும்பை கிர்காவ் பகுதியை சேர்ந்தவர் விருஷாந்த் வாட்கே (வயது 33). இவர் நவநிர்மாண் சேனா கட்சியின் மலபார்ஹில் தொகுதி சட்டமன்ற பிரிவு தலைவராக இருந்து வந்தார். இவரது தலைமையின் கீழ் செயல்பட்டு வந்த மகளிர் அணியை சேர்ந்த 42 வயது பெண்ணிடம் வருகிற மும்பை மாநகராட்சி தேர்தலில் டிக்கெட் வழங்குவதாக கூறி ஆசை வார்த்தை தெரிவித்தார்.
இதையடுத்து அப்பெண்ணை கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கடந்த ஜூலை மாதம் வரையில் 11 மாதங்களாக பல இடங்களுக்கு அழைத்து சென்று கற்பழித்து உள்ளார்.
கட்சி பிரமுகர் கைது
நாளடைவில் தொந்தரவு அதிகமானதால் பாதிக்கப்பட்ட பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களை சந்தித்து புகார் தெரிவித்தார். இந்த புகாரின் படி அவர் மீது நடவடிக்கை எடுக்க கட்சி தலைவர் ராஜ்தாக்கரேவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து விருஷாந்த் கேட்கே கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண் வி.பி. ரோடு போலீசிலும் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் அவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 376, 420, 500 ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






