ஏக்நாத் ஷிண்டே அணியில் இணைகிறேனா? நீலம் கோரே பதில்

மேல்சபை துணை சபாநாயகர் நீலம் கோரே ஏக்நாத் ஷிண்டே அணியில் இணைவதாக வெளியான தகவல் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மும்பை,
மேல்சபை துணை சபாநாயகர் நீலம் கோரே ஏக்நாத் ஷிண்டே அணியில் இணைவதாக வெளியான தகவல் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
சிவசேனாவில் இணைய திட்டம்
உத்தவ் தாக்கரே சிவசேனாவை சேர்ந்த தலைவர் நீலம் கோரே. இவர் மாநில சட்ட மேலவையின் துணை தலைவராக உள்ளார். இந்தநிலையில் சமீபத்தில் மும்பை வந்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை இவர் சந்தித்து பேசினார்.
இந்தநிலையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் சபாநாயகர் ராகுல் நர்வேகர் ஆகியோரையும் நீலம் கோரே சந்தித்து பேசியதாகவும், அவர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா அணியில் இணைய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகின.
கவர்னர் ஒதுக்கீட்டில் 12 மேல்சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட பிறகு மேல்சபையில் ஷிண்டே அணி மற்றும் பா.ஜனதா கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரும். எனவே தனது துணை தலைவர் பதவியை தக்கவைத்துகொள்ள அவர் இந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்பட்டது.
அதுமட்டும் இன்றி உத்தவ் தாக்கரே தலைமையில் நீலம் கோரே அதிருப்தியில் உள்ளதாகவும் தகவல்கள் பரவியது.
அரசியல் நோக்கம் இல்லை...
இந்தநிலையில் மேல்சபை துணை தலைவர் நீலம் கோரே இந்த தகவலை மறுத்துள்ளார். மேலும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை அவர் சந்தித்ததாக வெளியான செய்தியையும் மறுத்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
நான் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மும்பையில் பயணம் செய்தபோது சந்திதேன். இதில் அரசியல் நோக்கம் ஏதும் இல்லை.
ஷரத்தா வாக்கர் கொலை சம்பவம் தொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஒரு குறிப்பானை வழங்குவதற்காக இந்த சந்திப்பு நிகழ்ந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியில் எனது அர்ப்பணிப்பு உறுதியானது. இந்த தொடர்பு எதிர்காலத்திலும் தொடரும்.
இவ்வாறு நீலம் கோரே கூறியுள்ளார்.






