நிதிஷ்குமார் 11-ந் தேதி மும்பை வருகிறார்

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிக்காக நிதிஷ்குமார் வருகிற 11-ந் தேதி மும்பை வருவதாக சரத்பவார் தெரிவித்தார்.
மும்பை,
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிக்காக நிதிஷ்குமார் வருகிற 11-ந் தேதி மும்பை வருவதாக சரத்பவார் தெரிவித்தார்.
ஒருங்கிணைப்பு பணி
அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்க எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்றன. எதிர்க்கட்சி தலைவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ் குமார் களம் இறங்கி உள்ளார்.
அவர் கடந்த மாதம் டெல்லியில் சோனியா காந்தி, ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசினார். பின்னர் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியையும் சந்தித்தார். அப்போது எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு பா.ஜனதாவுக்கு எதிராக போராடுவது என அவர்கள் குரல் கொடுத்தனர்.
மும்பை வருகிறார்
இந்த நிலையில் நிதிஷ்குமார் வருகிற 11-ந் தேதி மும்பை வந்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க திட்டமிட்டு உள்ளார். இது தொடர்பான தகவலை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று சோலாப்பூரில் நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் கூறுகையில், "வருகிற 11-ந் தேதி நிதிஷ் குமார் மும்பை வருவதாக எனக்கு தகவல் கிடைத்தது. மும்பை வரும் அவரை சந்திப்பேன். பா.ஜனதாவுக்கு மாற்று நாட்டுக்கு தேவை. இது தான் எங்களது சந்திப்பின் நோக்கம்" என்றார்.






