கியாஸ் சிலிண்டர் வெடித்து மூதாட்டி, வாலிபர் பலி- 4 பேர் படுகாயம்

புனேயில் கியாஸ் சிலிண்டர் வெடித்து மூதாட்டி, வாலிபர் பலியாகினர். மேலும் வீட்டில் இருந்த 4 பேர் படுகாயமடைந்தனர்.
புனே,
புனேயில் கியாஸ் சிலிண்டர் வெடித்து மூதாட்டி, வாலிபர் பலியாகினர். மேலும் வீட்டில் இருந்த 4 பேர் படுகாயமடைந்தனர்.
சிலிண்டர் வெடித்து விபத்து
புனே சக்கான் பகுதியை சேர்ந்த 19 வயது மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் நேற்றுமுன்தினம் மாலை பக்கத்து வீட்டில் இருந்து கியாஸ் சிலிண்டர் ஒன்றை தனது வீட்டிற்கு தூக்கி வந்தார். பின்னர் அடுப்பில் பொருத்தும் பணியில் ஈடுபட்ட போது கியாஸ் கசிவு ஏற்பட்டது.
அப்போது திடீரென சிலிண்டர் வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டது. இதனால் சமையல் அறையில் இருந்த வாலிபர் மற்றும் வீட்டில் இருந்த 95 வயது மூதாட்டி ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே தீக்காயமடைந்து உயிரிழந்தனர்.
4 பேர் படுகாயம்
வீட்டில் இருந்த மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். படுகாயமடைந்த 4 பேரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான மூதாட்டி, வாலிபரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கியாஸ் சிலிண்டர் விபத்தில் சிக்கி 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






