லாரி மீது ஆம்னி பஸ் மோதி 6 பேர் பலி

புனே-பண்டர்பூர் நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 6 பேர் பலியாகினர்.
புனே,
புனே-பண்டர்பூர் நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 6 பேர் பலியாகினர்.
விபத்து
சாங்கிலி ஜாத் தாலுகா பகுதியில் உள்ள புனே-பண்டர்பூர் நெடுஞ்சாலையில் நேற்று காலை 5 மணி அளவில் ஆம்னி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த பகுதியில் கன்டெய்னர் லாரி ஒன்று சாலை ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்தது. இதனை ஆம்னி பஸ் டிரைவர் கவனிக்கவில்லை என தெரிகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக கன்டெய்னர் லாரியின் பின்புறமாக ஆம்னி பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர். வலியின் காரணமாக அவர்கள் மரண ஓலம் எழுப்பினர்.
இந்த நிலையில் சத்தம் கேட்டு அங்கு வந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் பஸ் உருக்குலைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இடிபாடுகளில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்து போலீசாரும், ஆம்புலன்சு வாகனத்துடன் அங்கு வந்தனர்.
6 பேர் பலி
விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீ்ட்டு சாங்கிலியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பஸ்சின் இடிபாடுகளில் சிக்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
அதுமட்டும் இன்றி ஆஸ்பத்திரியில் சிலரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அந்த ஆம்னி பஸ் பால்கர் மாவட்டம் வசாயில் இருந்து தானே வழியாக சாங்கிலிக்கு வந்தது தெரியவந்தது. விபத்து காரணமாக புனே-பண்டர்பூர் நெடுஞ்சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.






