சரத்பவார்- அஜித்பவார் ரகசிய சந்திப்புக்கு எதிர்ப்பு; பா.ஜனதாவுடன் கூட்டணி சேர விரும்புபவர்கள் செல்லலாம் - காங்கிரஸ் தலைவர் அதிரடி அறிவிப்பு


சரத்பவார்- அஜித்பவார் ரகசிய சந்திப்புக்கு எதிர்ப்பு; பா.ஜனதாவுடன் கூட்டணி சேர விரும்புபவர்கள் செல்லலாம் - காங்கிரஸ் தலைவர் அதிரடி அறிவிப்பு
x
தினத்தந்தி 17 Aug 2023 12:15 AM IST (Updated: 17 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சரத்பவார் விவகாரத்தில், பா.ஜனதாவுடன் கூட்டணி சேர விரும்புபவர்கள் செல்லலாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பிரிதிவிராஜ் சவான் அதிரடியாக கூறினார்.

புனே,

சரத்பவார் விவகாரத்தில், பா.ஜனதாவுடன் கூட்டணி சேர விரும்புபவர்கள் செல்லலாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பிரிதிவிராஜ் சவான் அதிரடியாக கூறினார்.

அரசியல் பரபரப்பு

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணியை முன்னின்று நடத்தி செல்லும் தலைவர்களில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் ஒருவராக உள்ளார். இந்தநிலையில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் அஜித்பவார் கட்சியை உடைத்து பா.ஜனதா கூட்டணியில் இணைந்தார். இது 'இந்தியா' கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு மத்தியில் கடந்த சனிக்கிழமை சரத்பவார் மற்றும் அஜித்பவார் நடத்திய ரகசிய சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்புக்கு 'இந்தியா' கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சிகள் எதிர்ப்பை பதிவு செய்திருந்தன.

கவலை அளிக்கிறது

இதுபற்றி நேற்று நிருபர்களிடம் கூறிய மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே, "சரத்பவார்-அஜித்பவார் ரகசிய சந்திப்பு கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் பற்றி இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் விவாதிக்கப்படும்" என்றார். மேலும் மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரிதிவிராஜ் சவான் நிருபர்களிடம் கூறியதாவது:-

விரும்புபவர்கள் செல்லலாம்

காங்கிரஸ் கட்சி வகுப்புவாத கட்சிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறது. எங்களுடன் இணைய விரும்புபவர்கள் எங்களுடன் தொடர்ந்து இணைந்திருப்பார்கள். பா.ஜனதாவுடன் செல்ல விரும்புபவர்கள் செல்லலாம். யாரும் யாருடைய கைகளையும் பிடித்து வைத்திருக்கவில்லை. தேர்தல் நெருங்கும்போது படம் படிப்படியாக தெளிவாகும். 2024-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க முடிவு செய்து, இதற்காக காங்கிரஸ் கட்சி வலுவாக தயாராகி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இருப்பினும் சரத்பவார் தனது வாழ்நாளில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க மாட்டார் என்று உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story