மத்திய அரசின் அழுத்தத்தால் பாக்ஸ்கான் திட்டம் குஜராத்துக்கு மாற்றப்பட்டது- காங்கிரஸ் குற்றச்சாட்டு


மத்திய அரசின் அழுத்தத்தால்  பாக்ஸ்கான் திட்டம் குஜராத்துக்கு மாற்றப்பட்டது- காங்கிரஸ் குற்றச்சாட்டு
x

மத்திய அரசின் அழுத்தத்தின் காரணமாக தான் பாக்ஸ்கான் திட்டம் குஜராத்திற்கு மாற்றப்பட்டது என காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.

மும்பை,

மத்திய அரசின் அழுத்தத்தின் காரணமாக தான் பாக்ஸ்கான் திட்டம் குஜராத்திற்கு மாற்றப்பட்டது என காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

மராட்டியத்தில் வேதாந்தா- பாக்ஸ்கான் நிறுவனங்கள் இணைந்து அமைக்க இருந்த செமிகன்டக்டர் நிறுவனம் குஜராத்தில் உள்ள தோலேராவுக்கு மாறியிருப்பது சர்ச்சைக்குரிய பிரச்சினையாக மாறி உள்ளது. எதிர்க்கட்சிகள் இந்த திட்டம் கைமாறியதற்கு ஆளும் அரசு தான் காரணம் என குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் சச்சின் சாவந்த் இதுகுறித்து நேற்று கூறியதாவது:-

மத்திய அரசின் அழுத்தம்

செமிகன்டக்டர் நிறுவனம் அமைக்க மராட்டியத்தில் உள்ள தலேகான் மற்றும் தோலேரா ஆகிய 2 இடங்களையும் ஒப்பிட்டு ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் தண்ணீர் பற்றாக்குறை, திறமையான தொழிலாளர்கள், உற்பத்தி சுற்றுச்சூழல், விநியோக சங்கிலி, விற்பனையாளர்கள் மற்றும் சதுப்பு நிலம் போன்ற பல்வேறு காரணங்களின் காரணமாக தோலேராவுக்கு குறைந்த முன்னுரிமையே அளிக்கப்பட்டது.

அதுமட்டும் இன்றி குஜராத்தை விட மராட்டியம் அதிக மூலதன மானியம் உள்பட பல சலுகைகளை வழங்கியது. இருப்பினும் மத்திய அரசின் அழுத்தத்தின் பேரில் தான் இந்த திட்டம் தோலேராவுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

கருணை தேவையில்லை

மத்திய அரசின் பிடிவாத போக்கால் இந்த திட்டம் நீண்ட நாட்களாக முடங்கும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே குஜராத்திற்கு மாற்றப்பட்ட கிப்ட் சிட்டி(சர்வதேச நிதி சேவை மையம்) திட்டமும் முடங்கி உள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததும். இந்த கிப்ட் சிட்டி திட்டம் அங்கு மாற்றப்பட்டது. இந்த நிதி மையம் மராட்டியத்திற்கு பெரும் முதலீட்டை கொண்டு வந்திருக்கும், அனைவருக்கும் பயனளித்திருக்கும். ஆனால் மத்திய அரசு அதை அனுமதிக்கவில்லை.

பாக்ஸ்கானை விட மராட்டியத்திற்கு பெரிய திட்டத்தை வழக்குவதாக பிரதமர் மோடி வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால் அத்தகைய பெரிய திட்டத்தை பெற மாநிலத்திற்கு அவரது கருணை தேவையில்லை.

மராட்டியம் எப்போதும் தொழில் துறையில் அதன் சொந்த தகுதியின் மூலம் முதலிடத்தில் உள்ளது. மராட்டியத்தில் இருந்து திட்டத்தை பறித்து குஜராத்தை வெற்றியடைய செய்யும் மோடியின் கனவை நிறைவேற்ற பா.ஜனதா தலைவர்கள் மாநிலத்தை பலவீனப்படுத்துவது துரதிருஷ்டவசமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story