அமிதாப் பச்சன், அனுஷ்கா சர்மாவை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றவர்களுக்கு அபராதம்


அமிதாப் பச்சன், அனுஷ்கா சர்மாவை மோட்டார் சைக்கிளில்  அழைத்து சென்றவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 18 May 2023 12:15 AM IST (Updated: 18 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் நடிகை அனுஷ்கா சர்மாவை ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றவர்களுக்கு மும்பை போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

மும்பை,

நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் நடிகை அனுஷ்கா சர்மாவை ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றவர்களுக்கு மும்பை போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணம்

இந்தி திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர், நடிகர் அமிதாப் பச்சன். 80 வயதான இவர், நடிப்பதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள தனது வீட்டில் இருந்து சொகுசு காரில் புறப்பட்டு உள்ளார். ஆனால் கார் மும்பை சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டது.

படப்பிடிப்புக்கு தாமதம் ஆகி விடும் என கருதிய அமிதாப் பச்சன் நடுவழியில் காரை நிறுத்தி, சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற முன்பின் தெரியாத ஒருவரிடம் 'லிப்ட்' கேட்டு விரைந்து சென்றார். தன்னை படப்பிடிப்பு தளத்திற்கு சரியான நேரத்தில் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அது தொடர்பான புகைப்படத்தை அமிதாப் பச்சன் இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியிட்டார்.

சர்ச்சை

இந்த புகைப்படம் வைரல் ஆனது. படப்பிடிப்பில் எப்போதும் நேரம் தவறாமையை கடைப்பிடிக்கும் அமிதாப் பச்சனுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தனர். ஆனால் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவருமே ஹெல்மெட் அணியவில்லை. இதனால் அமிதாப் பச்சனுக்கு எதிராக நெட்டிசன்கள் கமெண்ட்களையும் அள்ளி வீசினர். 'சூப்பர் ஸ்டாருக்கு ஹெல்மெட் தேவையில்லையா', 'காவல் துறை இவர்களுக்கு எல்லாம் அபராதம் விதிக்காதா' என கமெண்ட்கள் பறந்தன.

இதனால் பதறிய போலீசார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்தனர். இந்தநிலையில் நடிகர் அமிதாப் பச்சனை ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற நபருக்கு போலீசார் ரூ.1,000 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இது தொடர்பாக மும்பை போலீசார் தங்களது டுவிட்டர் பக்கத்தில், "மோட்டார் வாகன சட்டத்தின்படி சம்பந்தப்பட்ட நபருக்கு அபராத செல்லான் வழங்கப்பட்டது. அவரும் அபராத தொகையை செலுத்தி விட்டார்" என்று பதிவிட்டு உள்ளனர்.

அனுஷ்கா சர்மா

இதேபோன்ற சர்ச்சையில் இந்தி நடிகையும், கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மாவும் சிக்கி கொண்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் அவரை ஒருவர் அழைத்து சென்றார். அந்த நபரும் ஹெல்மெட் அணியவில்லை. இந்த படத்தையும் நெட்டிசன்கள் பதிவிட்டு, அதை மும்பை போலீசாரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அதன்பேரில் அனுஷ்கா சர்மாவை ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றவருக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர். அவருக்கு மோட்டார் வாகன சட்டத்தின் 3 பிரிவுகளின் கீழ் ரூ.10,500 அபராதம் விதிக்கப்பட்டதாக மும்பை போலீசார் தெரிவித்தனர். நடிகை அனுஷ்கா சர்மா படப்பிடிப்புக்கு தாமதம் ஆவதை தவிர்க்க தனது மெய்க்காவலருடன் மோட்டார் சைக்கிளில் சென்றதாக கூறப்படுகிறது.

இருப்பினும் இரு சம்பவங்களிலும் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணித்த பிரபலங்களான அமிதாப் பச்சன் மற்றும் அனுஷ்கா சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story