கொரோனா காலத்தில் செய்த பணிகளால் மராட்டியத்தில் பி.எப்.ஐ. அமைப்பு விரிவடைந்தது- போலீஸ் அதிகாரி தகவல்


கொரோனா காலத்தில் செய்த பணிகளால் மராட்டியத்தில் பி.எப்.ஐ. அமைப்பு விரிவடைந்தது- போலீஸ் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 3 Oct 2022 12:15 AM IST (Updated: 3 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா காலத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் செய்த பணிகளால், அந்த அமைப்பு மாநிலத்தில் விரிவடைய உதவியது என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மும்பை,

கொரோனா காலத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் செய்த பணிகளால், அந்த அமைப்பு மாநிலத்தில் விரிவடைய உதவியது என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மத்திய அரசு தடை

மராட்டியம், தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் சமீபத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) அமைப்பு அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் அந்த அமைப்பை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். மராட்டியத்தில் மும்பை, தானே, புனே உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடந்தது. மேலும் 20-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கைக்கு பிறகு மத்திய அரசு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை 5 ஆண்டுகளுக்கு தடை விதித்தது.

கொரோனா கால பணி

இந்தநிலையில் கொரோனா பரவல் காலத்தில் செய்த பணிகள் காரணமாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மராட்டியத்தில் வளர்ந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது:-

''8 ஆண்டுகளுக்கு முன் அந்த அமைப்பு மரத்வாடா மண்டலத்தில் மட்டுமே இருந்தது. ஆனால் கடந்த வாரம் தடை செய்யப்பட்ட போது மாநிலத்தில் உள்ள 35 மாவட்டங்களில் 22 மாவட்டத்தில் அதற்கு உறுப்பினர்கள் இருந்தனர். 2014-ம் ஆண்டுக்கு பிறகு தான் மராட்டியத்தில் நாந்தெட் பகுதியில் அந்த அமைப்பு இருப்பது தெரியவந்தது. அடுத்த சில ஆண்டுகளில் அவர்கள் மரத்வாடாவில் உள்ள 8 மாவட்டங்களில் உறுப்பினர்களை சேர்த்தனர். 2018-ம் ஆண்டு அவர்களுக்கு மும்பை, புனேயிலும் உறுப்பினர்கள் இருந்தனர். அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடரின் போது தன்னார்வ பணிகளில் ஈடுபடுவார்கள். 2021-ல் டவ்தே புயலின் போது அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமையல் பாத்திரங்கள் எல்லாம் கொடுத்தார்கள்.

கொரோனா காலத்தில் அவர்கள் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலுக்கு இறுதி சடங்கு செய்தனர். பல இடங்களில் அவர்கள் கவச உடை அணிந்து இறுதி சடங்குக்கு உதவி செய்தனர். இந்துக்களின் உடல்களை கூட தகனம் செய்தனர். புனேயில் இறுதி சடங்கு செய்ய மாநகராட்சி அவர்களுக்கு அனுமதி வழங்கி இருந்தது. ஆனால் மும்பையில் போலீசார் அவர்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை. கொரோனா காலத்தில் அவர்கள் செய்த பணி, மராட்டியத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு விரிவடைய உதவியாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story