போலீசார் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட மாட்டார்கள் - துணை முதல்-மந்திரி பட்னாவிஸ் பதில்

போலீசார் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட மாட்டார்கள் என துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சட்டசபையில் தெரிவித்தார்.
மும்பை,
போலீசார் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட மாட்டார்கள் என துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சட்டசபையில் தெரிவித்தார்.
ஆள் பற்றாக்குறை
மும்பை போலீஸ் துறையில் தொடர்ந்து ஆள் பற்றாக்குறை நிலவி வருகிறது. எனவே போலீசாரின் பணி சுமையை குறைக்க காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. இந்தநிலையில் போலீஸ் தட்டுப்பட்டை சரிசெய்வதற்காக மராட்டிய மாநில பாதுகாவலர்கள் கழகம் மூலம் மும்பைக்கு 3 ஆயிரம் போலீஸ்காரர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த மாநில உள்துறை முடிவு செய்துள்ளதாகவும், இது நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்ததாகவும் தகவல் வெளியானது.
நானா படோலே கேள்வி
இந்த பிரச்சினையை சட்டசபையில் காங்கிரஸ் தலைவர் நானா பாடோலே எம்.எல்.ஏ. எழுப்பினார். இது குறித்து அவர் பேசியதாவது:-
அரசு போலீசாரை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துகிறது. ஒப்பந்த அடிப்படையில் தான் உங்களது மந்திரிகளும் உள்ளனர். இது குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டால் அவர்கள் முறையாக பதில் அளிக்காமல் மழுப்புகின்றனர். எனவே அந்த கேள்விக்கு பதிலளிக்க தகுந்த நேரம் எடுத்துக்கொண்டு தெளிவான பதிலை கொடுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
பட்னாவிஸ் பதில்
இதற்கு பதிலளித்து துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-
மந்திரிகள் யாரும் ஒப்பந்த அடிப்படையில் இல்லை. அதே நேரத்தில் நீங்கள் ஒப்பந்த அடிப்படையில் சேர விரும்பினால் அது குறித்து நாங்கள் பரிசீலிப்போம். ஆனால் எந்த இடத்திலும் போலீசார் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படவில்லை. அப்படி ஒருபோதும் செய்யப்படாது. இது குறித்து விரிவான அறிக்கை வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.






