ஜூன் 8-ந் தேதி வரைசமீர் வான்கடேயை கைது செய்ய தடை- சி.பி.ஐ. வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை ஐ.ஆர்.எஸ். அதிகாரி சமீர் வான்கடேயை கைது செய்ய சி.பி.ஐ.க்கு மும்பை ஐகோர்ட்டு விதித்த தடையை வருகிற 8-ந் தேதி வரை நீட்டித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மும்பை,
சென்னை ஐ.ஆர்.எஸ். அதிகாரி சமீர் வான்கடேயை கைது செய்ய சி.பி.ஐ.க்கு மும்பை ஐகோர்ட்டு விதித்த தடையை வருகிற 8-ந் தேதி வரை நீட்டித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சொகுசு கப்பல் போதைப்பொருள் வழக்கு
மும்பையில் இருந்து கோவாவுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி சொகுசு கப்பல் புறப்பட்டு சென்றது. நடுக்கடலில் கப்பலில் சோதனை நடத்திய மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் போதைப்பொருள் வழக்கில் இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை கைது செய்தனர். பின்னர் ஆர்யன் கான் குற்றமற்றவர் என குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக ஆர்யன்கானை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்காமல் இருக்க ஐ.ஆர்.எஸ் (இந்திய வருவாய் பணி) அதிகாரியான அப்போதைய மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குனர் சமீர் வான்கடே உள்ளிட்ட 5 பேர் நடிகர் ஷாருக்கானிடம் ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. சமீர் வான்கடே தற்போது சென்னையில் வரி செலுத்துவோர் சேவைகள் பிரிவு தலைமை இயக்குனராக உள்ளார்.
இந்தநிலையில் சி.பி.ஐ. வழக்கிற்கு எதிராக சமீர்வான்கடே மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட்டு சமீர் வான்கடேயை நேற்று வரை கைது செய்ய இடைக்கால தடைவிதித்து இருந்தது. அதே நேரத்தில் அவரை சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது.
ஜூன் 8 வரை தடை
இதையடுத்து சமீர்வான்கடே கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜரானார். அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். 2 நாட்களும் தலா 5 மணி நேரம் விசாரணை நடந்தது.
இந்தநிலையில் சமீர் வான்கடே மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. நீதிபதிகள் அடுத்த மாதம் (ஜூன்) 8-ந் தேதி வரை சமீர் வான்கடேயை கைது செய்வதற்கான இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்.
கொலை மிரட்டல் வருவதாக புகார்
நடிகர் ஷாருக்கானிடம் ரூ.25 கோடி லஞ்சம் கேட்ட வழக்கில் சிக்கி உள்ள சென்னை ஐ.ஆர்.எஸ். அதிகாரி சமீர் வான்கடே நேற்று பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். கடந்த 4 நாட்களாக தனக்கும், தனது மனைவிக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாக குற்றம் சாட்டினார். இதுதவிர சமூகவலைதளங்களில் மோசமான குறுந்தகவல்கள் வருவதாகவும் தெரிவித்தார். பாதுகாப்பு கேட்டு மும்பை போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுத உள்ளதாக சமீர் வான்கடே கூறியுள்ளார்.






