நிறுவனத்தின் இயக்குனர்கள் மீது வழக்குப்பதிவு

மும்பை,
கொரோனா சமயத்தில் மும்பை மாநகராட்சி மேற்கொண்ட பல்வேறு ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் கிரித் சோமையா வலியுறுத்தி வந்தார். முதல்-மந்திரியும் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் கம்பெனிகள் பதிவு அலுவலத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் நேற்று பிற்பகல் மெரின் டிரைவ் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அவர் தனது புகாரில் ஒரு நிறுவனம் போலி ஆவணங்களை செலுத்தி பதிவு செய்ததாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக போலீசார் அந்த நிறுவனத்தின் இயக்குனர் 2 பேர் மீதும் மோசடி செய்யும் நோக்கத்தில் போலி ஆவணத்தை பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கொரோனா தொற்று காலத்தில் மருத்துவ வசதிகளை வழங்குவதற்காக ஒப்பந்தங்களை பெற மோசடி வழிகளை பயன்படுத்திய நிறுவனங்களில் இந்த நிறுவனமும் அடங்கும் என்று பா.ஜனதா தலைவர் கிரித் சோமையா குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ராவத்தின் நெருங்கிய உதவியாளரான சுஜித் பட்கர் அந்த நிறுவனம் உருவாக்கப்பட்டு சில மதங்களுக்கு பிறகு அதில் பங்குதாரராக மாறியதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இருப்பினும் வழக்கில் பட்கரின் பெயர் சேர்க்கப்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்து வருகிறது.






