இடஒதுக்கீடு கேட்டு போராட்டம்: மந்திரி மீது மஞ்சள் பொடி தூவி தாக்குதல் - சோலாப்பூரில் பரபரப்பு
சோலாப்பூரில் மந்திரி ராதாகிருஷ்ண விகே பாட்டீல் மீது தங்கர் சமுதாய போராட்டக்காரர் ஒருவர் மஞ்சள் பொடி தூவி தாக்குதல் நடத்தினார்.
சோலாப்பூர்,
சோலாப்பூரில் மந்திரி ராதாகிருஷ்ண விகே பாட்டீல் மீது தங்கர் சமுதாய போராட்டக்காரர் ஒருவர் மஞ்சள் பொடி தூவி தாக்குதல் நடத்தினார்.
மந்திரி வருகை
மராத்தா சமூகத்தினர் இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜல்னாவில் நடந்த போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்காக துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மன்னிப்பு கோரி இருந்தார். இந்த நிலையில் மாநில வருவாய்த்துறை மந்திரி ராதாகிருஷ்ண விகே பாட்டீல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நேற்று சோலாப்பூர் வந்திருந்தார். அவர் அங்குள்ள அரசு ஓய்வு இல்லத்தில் தங்கி இருந்தார்.
மஞ்சள் பொடியை தூவி தாக்குதல்
இதுபற்றி அறிந்த தங்கர் சமூகத்தை சேர்ந்த சிலர் அரசு ஓய்வு இல்லத்துக்கு சென்றனர். அங்கு போராட்டம் நடத்திய அவர்கள், தங்களது சமூகத்தினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு (ஓ.பி.சி) பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். பின்னர் போராட்டக்காரர்களில் ஒருவர் கோரிக்கை மனுவை மந்திரி ராதாகிருஷ்ண விகே பாட்டீலை சந்தித்து கொடுத்தார். அப்போது திடீரென அந்த நபர் வைத்திருந்த மஞ்சள் பொடியை மந்திரியின் தலையில் கொட்டினார். இதனால் மந்திரி அதிர்ச்சி அடைந்தார்.
அடித்து உதைத்தனர்
உடனே மந்திரியின் ஆதரவாளர்கள் மஞ்சள் பொடியை கொட்டிய நபரை பிடித்து அடித்து உதைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே மந்திரி தனது ஆதரவாளர்களிடம் இருந்து அந்த நபரை விடுவித்தார். பின்னர் அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.