சுவிஸ் வங்கியில் ரூ.36 ஆயிரம் கோடி வழக்கில் சிக்கிய புனே தொழில் அதிபர் பலி

சுவிஸ் வங்கியில் ரூ.36 ஆயிரம் கோடி பணம் இருந்தது தொடர்பாக அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறையால் விசாரிக்கப்பட்ட புனே தொழில் அதிபர் ஹசன்அலி கான் உயிரிழந்தார்.
புனே,
சுவிஸ் வங்கியில் ரூ.36 ஆயிரம் கோடி பணம் இருந்தது தொடர்பாக அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறையால் விசாரிக்கப்பட்ட புனே தொழில் அதிபர் ஹசன்அலி கான் உயிரிழந்தார்.
சுவிஸ் வங்கி பணம்
புனேயை சேர்ந்தவர் தொழில் அதிபர் ஹசன் அலிகான். 2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் வருமான வரித்துறையினர் ஹசன் அலிகானுக்கு சொந்தமான இடங்களில் மும்பை, புனேயில் சோதனை நடத்தினர். அப்போது ஹசன் அலிகான் சுவிஸ் வங்கி கணக்கில் ரூ.36 ஆயிரம் கோடி பணம் போட்டதற்கான ஆவணம் ஒன்று சிக்கியது.
இதைதொடர்ந்து ஹசன்அலிகான் தேசிய அளவில் தலைப்பு செய்தி ஆனார். 2011-ம் ஆண்டு சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அவரை கைது செய்தது. 4 ஆண்டுகள் ஜெயிலில் இருந்த அவர் 2015-ல் ஜாமீனில் வெளியே வந்தார்.
அவரின் சுவிஸ் வங்கி கணக்கு தொடர்பாக வருமான வரித்துறை, சி.பி.ஐ.யும் விசாரணை நடத்தியது.
உயிரிழப்பு
இந்த நிலையில் ஹசன்அலிகான் கடந்த வியாழக்கிழமை இரவு ஐதராபாத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். நேற்று முன்தினம் காலை அவரது உடல் புனே கொண்டு வரப்பட்டது.
ஹசன் அலிகானின் வக்கீல் பிரசாந்த் பாட்டீல் கூறுகையில், " மத்திய விசாரணை முகமைகள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதால், ஒரு அப்பாவியின் வாழ்க்கை எப்படி வீணாகும் என்பதற்கு உதாரணம் ஹசன்அலிகான் வழக்கு. சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு என்றால், பணம் எங்கே?. ஹசன்அலிகான் வழக்கை கோா்ட்டு தொடர்ந்து விசாரிக்க வேண்டும். அப்போது தான் அவருக்கு நீதிகிடைக்கும் " என்றார்.






