'ராகுல் காந்தி ஒருநாள் நாட்டை வழிநடத்துவார்' - சரத்பவார் நம்பிக்கை
ாரத ஒற்றுமை யாத்திரைக்கு பிறகு ராகுல்காந்தி மக்களால் உற்றுநோக்கப்படுகிறார். அவர் ஒருநாள் நாட்டை வழிநடத்துவார் என்று சரத்பவார் கூறினார்.
மும்பை,
பாரத ஒற்றுமை யாத்திரைக்கு பிறகு ராகுல்காந்தி மக்களால் உற்றுநோக்கப்படுகிறார். அவர் ஒருநாள் நாட்டை வழிநடத்துவார் என்று சரத்பவார் கூறினார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பேசியதாவது:-
அமலாக்கத்துறை நடவடிக்கை
பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்தவர்களுக்கு தேசியவாத காங்கிரசுடன் எந்த தொடர்பும் இல்லை. விசாரணை அமைப்புகளின் அச்சுறுத்தல் காரணமாகவே அவர்கள் பா.ஜனதா கூட்டணிக்கு தாவி உள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத ஒற்றுமை நடைபயணத்திற்கு பிறகு மக்களால் தீவிரமாக உற்று நோக்கப்படுகிறார். அவர் ஒருநாள் தனது தலைமையில் நாட்டை வழிநடத்துவார். மோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார். மத்திய புலனாய்வு அமைப்புகளின் நடவடிக்கை இந்தியா கூட்டணி கட்சிகளின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும்.
காங்கிரஸ் புத்துயிர் பெறும்
டெல்லியில் உள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகளில் 3-ஐ காங்கிரஸ் கட்சிக்கு வழங்க ஆம் ஆத்மி தயாராக இருப்பதாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் என்னிடம் தெரிவித்தார். உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் புத்துயிர் பெறும் என்று நம்பிக்கை உள்ளது. அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மராட்டியத்தில் மகா விகாஸ் அகாடி கூட்டணி நிச்சயமாக ஆட்சி அமைக்கும். இது குறித்து நான் தொகுதி வாரியாக ஆய்வு செய்துள்ளேன். கண்டிப்பாக நாங்கள் மராட்டியத்தில் ஆட்சி அமைப்போம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எங்களுக்கு 4 இடங்கள் மட்டுமே கிடைத்தன. ஆனால் இந்த முறை குறைந்தபட்சம் 50 சதவீத இடங்கள் கிடைத்தாலும் நான் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.