தண்டவாளத்தில் கோளாறால் ரெயில் சேவை பாதிப்பு

கோரேகாவ் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரெயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக 70 ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
மும்பை,
கோரேகாவ் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரெயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக 70 ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
தொழிற்நுட்ப கோளாறு
மும்பையின் உயிர்நாடியாக விளங்கும் மின்சார ரெயில் போக்குவரத்தில் தினசரி 35 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். சிறிது தாமதம் ஆனால் கூட கூட்ட நெரிசலில் சிக்கும் சூழ்நிலை ஏற்படும்.
இந்தநிலையில் மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் நேற்று காலை 6.20 மணி அளவில் கோரேகாவில் இருந்து புறப்பட்ட மின்சார ரெயில் ஒன்று விரைவு வழித்தடத்திற்கு திருப்பி விடப்பட்டது. அப்போது தண்டவாளம் மாறும் மையப்பகுதியில் திடீரென தொழிற்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதனால் ரெயில் ஸ்லோ மற்றும் விரைவு வழித்தடத்தின் நடுவழியில் நின்றது. இதன் காரணமாக விரைவு மற்றும் ஸ்லோ வழித்தடத்தில் ரெயில்கள் செல்ல முடியாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.
6 மின்சார ரெயில் சேவை ரத்து
தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் அங்கு வந்து சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் போராடி காலை 7.23 மணி அளவில் சரிசெய்யப்பட்டது. இதன்பின்னர் ஆங்காங்கே நிறுத்தப்பட்ட ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.
தொழிற்நுட்ப கோளாறு காரணமாக 6 மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதைத்தவிர 70 லோக்கல் ரெயில் சேவை மற்றும் 6 தொலைதூர எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 30 நிமிடம் தாமதமாக இயக்கப்பட்டது.
காலை வேளையில் அலுவலகம் செல்பவர்கள் ரெயில் தாமதத்தினால் மிகவும் அவதி அடைந்தனர். பயணிகளின் அசவுகரியத்திற்கு மிகவும் வருந்துகிறோம் என மேற்கு ரெயில்வே கோட்ட மேலாளர் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.






