மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும்- முதல்-மந்திரி ஷிண்டே அறிவிப்பு

மராட்டியத்தில் பலத்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்து உள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் பலத்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்து உள்ளார்.
விவசாயிகள் பாதிப்பு
மராட்டியத்தில் சமீபத்தில் பெய்த பலத்த மழையால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
புனே, அவுரங்காபாத் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ளத்துக்கு பயிர்கள் நாசமாகின. மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாநில அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டவர்கள் வலியுறுத்தினர்.
இழப்பீடு வழங்கப்படும்
இந்தநிலையில் பலத்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
கடந்த 3 மாதங்களில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு மாநில அரசு 72 பெரிய முடிவுகளை எடுத்து உள்ளது. போர்க்கால அடிப்படையில் மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளேன். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும். அவர்கள் கைவிடப்படமாட்டார்கள். அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும். நாக்பூர் - ஷிரடி சாம்ருதி விரைவு சாலை அடுத்த மாதம் திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






