வெயில் தாக்கத்துக்கு 75 பேர் வரை பலியாகி இருக்க வாய்ப்பு- சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு

மும்பை,
நவிமும்பை அருகே உள்ள கார்கர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மராட்டிய பூஷண் விருது வழங்கும் விழாவில் மத்திய மந்திரி அமித்ஷா, முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பல லட்சம் மக்கள் கலந்துகொண்டனர். பகலில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதால் வெயிலின் தாக்கம் காரணமாக 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த நிலையில் உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சி தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் இதுகுறித்து நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ராய்காட் மாவட்ட தாலுகாக்களில் உள்ள எல்லா கிராமங்களிலும் இருந்து எங்களது கட்சி நிர்வாகிகள் மூலம் கிடைத்த தகவலின்படி அமித்ஷா விழாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 முதல் 75 பேர் வரை இருக்கும் என தெரியவந்துள்ளது. ஆனால் அரசு உண்மையை மறைக்கிறது. இது ஒரு கொடூரமான அரசாங்கம், அவர்கள் ஆட்சியில் இருக்க எந்த உரிமையும் இல்லை. இந்த அரசு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






