உடல்நலம் விசாரித்த ராகுல் காந்தியை வெகுவாக பாராட்டிய சஞ்சய் ராவத்

கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் என்னை தொடர்பு கொண்டு உடல்நலம் விசாரித்த ராகுல் காந்தியை சஞ்சய் ராவத் வெகுவாக பாராட்டி உள்ளார்.
மும்பை,
கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் என்னை தொடர்பு கொண்டு உடல்நலம் விசாரித்த ராகுல் காந்தியை சஞ்சய் ராவத் வெகுவாக பாராட்டி உள்ளார்.
கடும் எதிர்ப்பு
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மராட்டியத்தில் மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நடைபயணத்தின்போது வீர சாவர்க்கர் குறித்த அவரது விமர்சனங்கள் கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி இதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்தது.
முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, வீர சாவர்க்கர் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருக்கும் நிலையில் அவரை குறித்து ராகுல் காந்தி கூறிய கருத்துகளை தான் ஏற்கவில்லை என்றும் தெரிவித்து இருந்தார்.
இதேபோல பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தும் தனது எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்தார்.
இந்த நிலையில் சஞ்சய் ராவத் நேற்று தான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வெகுவாக பாராட்டி உள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவில் கூறியிருப்பதாவது:-
மனிதாபிமானத்தின் அடையாளம்
சில விஷயங்களில் கடுமையான கருத்து வேறுபாடு இருந்தபோதிலும், சக அரசியல்வாதியை நலன் விசாரிப்பது என்பது மனிதாபிமானத்தின் அடையாளம். இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் மும்முரமான பணிகளுக்கு மத்தியிலும் எனக்காக நேரம் ஒதுக்கி எனது உடல்நலன் குறித்து விசாரிப்பதற்காக நேற்று முன்தினம் ராகுல்காந்தி என்னை போனில் அழைத்தார். எனக்காக அவர் கவலைப்பட்டதாக தெரிவித்தார்.
110 நாட்கள் சிறையில் இருந்து சக அரசியல் சேவகனின் வலியை உணர்ந்துகொண்ட அவரது கரிசணத்தை நான் பாராட்டுகிறேன். இதுபோன்ற செயல்கள் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அரிதாகி வருகின்றன. ராகுல் காந்தி தனது நடைபயணத்தில் அன்பு மற்றும் இரக்கம் மீது அதிக கவனம் செலுத்துகிறார். எனவே இந்த பயணம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






