சிவசேனா சின்னம் குறித்து தற்போது தேர்தல் ஆணையம் முடிவெடுக்க கூடாது- சஞ்சய் ராவத் வலியுறுத்தல்

எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும் வரை சிவசேனா சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்க கூடாது என சஞ்சய் ராவத் வலியுறுத்தி உள்ளார்.
மும்பை,
எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும் வரை சிவசேனா சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்க கூடாது என சஞ்சய் ராவத் வலியுறுத்தி உள்ளார்.
2 ஆக உடைந்த சிவசேனா
சிவசேனா கட்சி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2 ஆக உடைந்தது. உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில் சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்கு இரண்டு அணியினரும் உரிமை கோரி வருகின்றனர். இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக ஷிண்டே அணியை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருந்தனர். இது தொடர்பான வழக்கும் சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது.
அவரசம் கூடாது...
இந்தநிலையில் உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ராவத் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிவசேனா கட்சியில் எந்த பிளவும் ஏற்படவில்லை. சிவசேனா சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் பிரிந்துவிட்டனர். இதனால் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தமில்லை. இந்த பிளவு கானல் நீராக தான் உள்ளது. சில எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் வெளியேறினர். ஆனால் கட்சி அப்படியே தான் இருக்கிறது. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வெளியாகும் வரை தேர்தல் சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அவசரம் காட்ட கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை பிப்ரவரி 14-ந் தேதி தொடங்கும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியிருந்தது.






