காங்கிரஸ் கட்சி ஆணவத்துடன் செயல்பட்டது- சுயசரிதையில் சரத்பவார் குற்றச்சாட்டு

மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஆணவ போக்கு குறித்து சரத்பவார் சுயசரிதையில் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
மும்பை,
மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஆணவ போக்கு குறித்து சரத்பவார் சுயசரிதையில் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
கூட்டணி சர்ச்சை
மராட்டியத்தில் கடந்த சட்டசபை தேர்தலுக்கு பின்பு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகா விகாஸ் கூட்டணி அமைக்க முக்கிய காரணமாக அமைந்தவர் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார். அவர் தனது 'லோக் மஜே சங்கதி' என்ற சுயசரிதையின் புதுப்பிக்கப்பட்ட பதிவை வெளியிட்டு உள்ளார். இதில் அவர் மகா விகாஸ் அகாடி கூட்டணி குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். குறிப்பாக அவர் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ராஜினாமா குறித்தும், அவரது கட்சி நிர்வாகம் குறித்தும் வெளிப்படையாக பேசி இருந்தது சர்ச்சையை கிளப்பியது. இதேபோல கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியையும் அவர் விட்டுவைக்கவில்லை.
காங்கிரஸ் பிடிவாதம்
குறிப்பாக மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசை அமைப்பதற்கான விவாதங்கள் நடந்து கொண்டு இருந்தபோது காங்கிரஸ் தலைவர்கள் ஆணவ போக்குடன் செயல்பட்டதாக குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு காங்கிரஸ் கட்சி சந்தேகத்திற்கு இடமின்றி மையப்புள்ளியாக செயல்படுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது, அந்த கட்சி தனது நாடு தழுவிய பலத்தை திடீரென்று உணருகிறது. காங்கிரசின் அணுகுமுறையால் கூட்டணி பேச்சுவார்த்தையில் எனது பொறுமை சோதிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தையை தொடர முடியாது என்றும் கருதினேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
2019-ம் ஆண்டு தேர்தல்
மேலும் ஒரு நேர்காணலில் காங்கிரஸ் கட்சியின் இந்த ஆணவமான அணுகுமுறையை சாடியதையும் நினைவு கூர்ந்துள்ளார். இதில் அவர், தனது நிலத்தை இழந்து, மாளிகையை பராமரிக்க முடியாத நில உரிமையாளர், கடந்த கால பெருமையை மட்டுமே பேசிக்கொண்டு இருப்பதை காங்கிரஸ் கட்சியுடன் ஒப்பிட்டு உள்ளார். அதேபோல் 2019-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி மனநிலையுடன் தான் போட்டியிட்டது. ஆனால் தனது மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிரசாரம் அவர்களுக்கு கூடுதல் வெற்றியை கொடுக்க உதவியதாகவும் சரத்பவார் சுயசரிதையில் கூறியுள்ளார்.






