தொழிற்சாலையை திறந்து வைத்ததோடு கவுதம் அதானி வீட்டிற்கு சென்ற சரத்பவார்; 'இந்தியா' கூட்டணியில் சலசலப்பு
கவுதம் அதானிக்கு சொந்தமான தொழிற்சாலையை திறந்து வைத்ததோடு, அவரின் வீட்டிற்கும் சரத்பவார் சென்றார். இது இந்தியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை,
கவுதம் அதானிக்கு சொந்தமான தொழிற்சாலையை திறந்து வைத்ததோடு, அவரின் வீட்டிற்கும் சரத்பவார் சென்றார். இது இந்தியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதானியை புகழ்ந்த சரத்பவார்
அதானி குழுமம், பங்குகளின் விலையை செயற்கையாக மாற்றி அமைத்து கொள்ளை லாபம் ஈட்டியதாகவும், கணக்குகளில் தில்லுமுல்லு செய்ததாகவும், வரிவிலக்கு உள்ள நாடுகளை தவறாக பயன்படுத்தியதாகவும் 'ஹிண்டன்பர்க்' என்ற அமெரிக்க ஆய்வு நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் குற்றம் சாட்டியது. இதுகுறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வலியுறுத்தின. இந்த வேளையில் கடந்த ஏப்ரல் மாதம் மும்பையில் உள்ள சரத்பவாரின் இல்லமான சில்வர் ஓக்கிற்கு அதானி குழும தலைவர் கவுதம் அதானி சென்றிருந்தார். அப்போது அவர்களின் சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடந்தது. மேலும் கவுதம் அதானிக்கு ஆதரவாக சரத்பவார் கருத்து தெரிவித்தார். இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சரத்பவாரின் இந்த நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியது.
தொழிற்சாலை திறப்பு
இந்த நிலையில் சரத்பவார் நேற்று குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகே உள்ள சனந்த் என்ற கிராமத்தில் கவுதம் அதானியின் தொழிற்சாலை ஒன்றை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அதானியின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு சென்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அதானி-சரத்பவார் சந்திப்பின்போது என்ன நடந்தது என்ற தகவல் வெளியாகவில்லை. இந்த நிலையில் சரத்பவார் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அதானி தொழிற்சாலையின் ரிப்பனை வெட்டுவது போன்ற படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் அவர், " இந்தியாவின் முதல் லக்டோபெரின் எக்சிம்பர் ஆலையை குஜராத்தில் அதானியுடன் இணைந்து திறந்து வைத்தது பாக்கியம்" என்று குறிப்பிட்டுள்ளார். இது எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.