பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை- விடுதி காப்பாளருக்கு 5 ஆண்டு கடுங்காவல்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி காப்பாளருக்கு 5 ஆண்டு கடுங்காவல் விதித்து சிறப்பு கோர்ட்டு உத்தரவு.
வசாய்,
பால்கர் மாவட்டம் தலசேரியில் அரசு பள்ளி பெண்கள் விடுதியில் காப்பாளராக இருந்து வந்தவர் சூர்யகாந்த். கடந்த 2017-ம் ஆண்டு அங்கு 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவியை, தனது அலுவலகத்திற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். மேலும் செல்போனில் ஆபாச படங்களை காண்பித்து தொல்லை கொடுத்து வந்தார்.
இதுபற்றி யாரிடமும் தெரிவித்தால் மதிப்பெண்களை குறைத்து விடுவதாக மிரட்டி வந்தார். பாதிக்கப்பட்ட மாணவி சம்பவம் குறித்து உறவினர் ஒருவரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்தார்.
இதுபற்றி அறிந்த பெற்றோர் விடுதிக்கு சென்று சூர்யகாந்த்தை பிடித்து சராமாரியாக தாக்கினர். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று சூர்யகாந்த்தை பிடித்து கைது செய்தனர். மேலும் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை நிறைவில் அவர் மீதான குற்றம் நிரூபணமானது.
இதையடுத்து அவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
-----






