2019-ல் ஆட்சியமைப்பது தொடர்பாக பா.ஜனதா தலைவர்களை சரத்பவார் டெல்லியில் 4 முறை சந்தித்தார்; மந்திரி கிரிஷ் மகாஜன் பகீர் தகவல்
2019-ல் ஆட்சியமைப்பது தொடர்பாக பா.ஜனதா தலைவர்களை டெல்லியில் சரத்பவார் 4 முறை சந்தித்ததாக மந்திரி கிரிஷ் மகாஜன் கூறினார்.
மும்பை,
2019-ல் ஆட்சியமைப்பது தொடர்பாக பா.ஜனதா தலைவர்களை டெல்லியில் சரத்பவார் 4 முறை சந்தித்ததாக மந்திரி கிரிஷ் மகாஜன் கூறினார்.
80 மணி நேர அரசு
2019-ம் ஆண்டு நடந்த மராட்டிய சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜனதா, சிவசேனா கூட்டணி முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் உடைந்தது. இதையடுத்து அப்போதைய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைக்க முயற்சித்து வந்தார். இந்தநிலையில் எதிர்பாராத திருப்பமாக தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவாருடன் இணைந்து தேவேந்திர பட்னாவிஸ் அதிகாலையில் பதவி ஏற்றுக்கொண்டார். இவர்களின் ஆட்சி 80 மணி நேரத்தில் கவிழ்ந்தது. இந்த விவகாரத்தில் பா.ஜனதாவை சரத்பவார் விமர்சிப்பதும் உண்டு. ஆனால் இந்த தடாலடி பதவி ஏற்புக்கு சரத்பவார் தான் காரணம் என்று பா.ஜனதா மந்திரியும், தேவேந்திர பட்னாவிசுக்கு நெருக்கமானவருமான கிரிஷ் மகாஜன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதுகில் குத்தினார்
2019 தேர்தலை அடுத்து ஆட்சியமைப்பது தொடர்பாக சரத்பவார் டெல்லியில் பா.ஜனதா தலைவர்களை 4 முறை சந்தித்தார். இதில் ஒரு சந்திப்பில் அஜித்பவாரும் உடன் இருந்தார். இதை சரத்பவாரால் மறுக்க முடியாது. பேச்சுவார்த்தையின் போது கவலைப்பட வேண்டாம் என்று சரத்பவார் கூறினார். ஆனால் அவர் பா.ஜனதாவை முதுகில் குத்தி விட்டார். முதுகில் குத்தும் பாரம்பரியம் சரத்பவாருக்கே உரித்தானது. இந்த முறை அவர் பா.ஜனதா முதுகில் குத்திவிட்டார். தேவேந்திர பட்னாவிஸ், அஜித்பவாரின் பதவி ஏற்பு நிகழ்வை பா.ஜனதா முன்னெடுத்ததாக சரத்பவார் கூறுவது உண்டு. ஆனால் அதற்கு சரத்பவார் தான் காரணம். இவ்வாறு அவர் கூறினார்.