மும்பை டிரான்ஸ் ஹார்பர் கடல்வழி பால பணிகளை ஆய்வு செய்த ஷிண்டே

மும்பை டிரான்ஸ் ஹார்பர் கடல்வழி பாலத்தின் பணிகளை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே ஆய்வு செய்தார். இந்த ஆண்டு இறுதியில் பணிகள் நிறைவு பெற உள்ளது.
மும்பை,
மும்பை டிரான்ஸ் ஹார்பர் கடல்வழி பாலத்தின் பணிகளை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே ஆய்வு செய்தார். இந்த ஆண்டு இறுதியில் பணிகள் நிறைவு பெற உள்ளது.
இந்தியாவின் நீளமான பாலம்
மும்பை- நவிமும்பை இடையே கட்டப்பட்டு வரும் சுமார் 22 கிலோ மீட்டர் நீளம் கொண்ட பாலம் கட்டும் பணிகள் கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயை எட்டி உள்ளது. 6 வழி பாதையாக அமைக்கப்படும் இந்த பாலம் சுமார் 16.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு கடலுக்கு மேல் அமைகிறது. மீதமுள்ள 5.5 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே நிலப்பரப்பில் அமைகிறது.
இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டால் இந்தியாவிலேயே இது தான் மிக நீளமான கடல்வழி பாலமாக இருக்கும். உலகின் 10-வது நீளமான சாலையாக இருக்கும்.
ஷிண்டே ஆய்வு
இந்த பாலத்தின் கட்டுமான பணிகளை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேற்று பார்வையிட்டார். அப்போது துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உடன் இருந்தார். இந்த பிரமாண்ட பாலத்தின் அனைத்து பணிகளும் வருகிற நவம்பர் மாதம் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலம் கட்டப்படுவதன் மூலம் நவிமும்பை மற்றும் ராய்காட் மாவட்டங்களில் பொருளாதாரம் வளர்ச்சி காணும் என்று நம்பப்படுகிறது. இந்த பாலத்தால் மும்பை மற்றும் நவிமும்பை, புனே எக்ஸ்பிரஸ்வே மற்றும் மும்பை- கோவா நெடுஞ்சாலை இடையே சுமார் 15 கிலோ மீட்டர் குறைவதால் எரிபொருள் சேமிக்கப்படுவதுடன், பயண நேரம் சுமார் 1 மணி நேரம் மிச்சமாகிறது.
இதேபோல மும்பை துறைமுகம் மற்றும் ஜவகர்லால் நேரு துறைமுகங்களை இந்த பாலம் இணைக்கிறது. இந்த பாலம் மூலமாக மும்பையில் வாகன போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






