சூப்பர் மார்க்கெட்டில் ஒயின் விற்கும் திட்டத்தை பா.ஜனதா எதிர்க்காது- ஷிண்டே அணி மந்திரி நம்பிக்கை


சூப்பர் மார்க்கெட்டில் ஒயின் விற்கும் திட்டத்தை பா.ஜனதா எதிர்க்காது- ஷிண்டே அணி மந்திரி நம்பிக்கை
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 23 Sep 2022 6:45 PM GMT)

சூப்பர் மார்க்கெட்டில் ஒயின் விற்கும் திட்டத்தை பா.ஜனதா எதிர்க்காது என ஷிண்டே அணியை சேர்ந்த மந்திரி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

மும்பை,

சூப்பர் மார்க்கெட்டில் ஒயின் விற்கும் திட்டத்தை பா.ஜனதா எதிர்க்காது என ஷிண்டே அணியை சேர்ந்த மந்திரி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

மந்திரி நம்பிக்கை

மராட்டியத்தில் கடந்த மகாவிகாஸ் அகாடி ஆட்சியின் போது சூப்பர் மாா்க்கெட்களில் 'ஒயின்' மதுபானம் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்துக்கு அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது மாநிலத்தில் ஷிண்டே - பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

இந்தநிலையில் சூப்பர் மார்க்கெட்களில் ஒயின் விற்பனை செய்யும் திட்டத்தை பா.ஜனதா எதிர்க்காது என நம்புவதாக கலால்துறை மந்திரி சம்புராஜ் தேசாய் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

மாநில நலன்

ஷிண்டே அணியை சேர்ந்த இவர் இதுகுறித்து கூறுகையில், " திட்டம் தொடர்பாக பொது மக்களிடம் கருத்து கேட்க அதுகுறித்த தகவல் பொது தளத்தில் போடப்பட்டு இருந்தது. மேலும் ஜூலை மாத இறுதியில் திட்டம் தொடர்பாக கருத்துக்கள், ஆட்சேபனைகள் பெறப்பட்டன. எனினும் அரசியல் மாற்றங்களால் அதில் கவனம் செலுத்த முடியாமல் போனது. பொது மக்கள் கருத்துக்கள் கிடைத்தவுடன் அது தொடர்பாக மண்டல வாரியாக ஆய்வு செய்வேன். ஊரகப்பகுதி மக்களின் கருத்துகளும் ஆய்வு செய்யப்படும். அதுகுறித்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம் விரிவாக கூறப்பட்ட பின்னர், திட்டம் மந்திரிசபைக்கு கொண்டு செல்லப்படும். இந்த திட்டத்தில் மாநில, விவசாயிகள் நலன் அடங்கி இருக்கிறது. எனவே இந்த திட்டத்தை பா.ஜனதா மந்திரிகள் எதிர்க்க மாட்டார்கள் என நம்புகிறேன் " என்றார்.


Next Story