சிவசேனா- சம்பாஜி பிரிகடே கூட்டணி- உத்தவ் தாக்கரே அறிவிப்பு


சிவசேனா- சம்பாஜி பிரிகடே கூட்டணி- உத்தவ் தாக்கரே அறிவிப்பு
x

சிவசேனா, சம்பாஜி பிரிகடே கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாக உத்தவ் தாக்கரே நேற்று அறிவித்தார்.

மும்பை,

சிவசேனா, சம்பாஜி பிரிகடே கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாக உத்தவ் தாக்கரே நேற்று அறிவித்தார்.

மோசமான சேதம்

மகா விகாஸ் அகாடி அரசு கவிழ்ந்ததாலும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணி செயல்படுவதாலும் சிவசேனாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் சிவசேனா கட்சி, பிரபல மராத்தா அமைப்பான சம்பாஜி பிரிகடேவுடன் கூட்டணி அறிவிப்பை வெளியிட்டது.

இதுகுறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பிராந்திய பெருமை

சம்பாஜி பிரிகடே உடனான கூட்டணி கருத்தியல் ரீதியாகவும், அரசியலமைப்பு மற்றும் பிராந்திய பெருமையை நிலை நாட்டுவதற்காகவும் உருவாக்கப்பட்டு உள்ளது.

சம்பாஜி பிரிகடே சித்தாந்தத்திற்காக போராடுபவர்களை உள்ளடக்கியது ஆகும். கூட்டணியில் ஏற்படும் கொள்கை முரண்பாடு குறித்து கேள்வி எழுப்புகிறீர்கள், முதலில் ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கைகளின்படி பா.ஜனதா செயல்படுகிறதா என்று பார்க்கவேண்டும்.

கடந்த 2 மாதங்களில் கொள்கை ரீதியாக சிவசேனாவுடன் நெருக்கமான கட்சிகள் மற்றும் கொள்கைக்கு முற்றிலும் எதிர்மறையான கட்சிகள் என்னை தொடர்பு கொண்டன. இந்த கட்சிகள் அனைத்தும் பிராந்திய பெருமை மற்றும் பிராந்திய கட்சிகளை காப்பாற்ற ஒன்றிணைய வேண்டும் என்று நினைக்கின்றன.

மாநில சுற்றுப்பயணம்

சுப்ரீம் கோர்ட்டில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணி எம்.எல்.ஏ.க்களுக்கும், எனது பிரிவுக்கும் இடையேயான சட்ட போராட்டத்தின் முடிவு நாட்டில் தற்போது இருப்பது ஜனநாயகமா? அல்லது சர்வாதிகாரமா? என்பதை தீர்மானிக்கும்.

தசராவையோட்டி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். தற்போது கட்சி அமைப்பை வலுப்படுத்துவதில் நான் கவனம் செலுத்தி வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒருங்கிணைப்பு குழு

சம்பாஜி பிரிகடேவின் தலைவர் மனோஜ் அகாரே கூறுகையில், "எங்கள் அமைப்பு தனது அரசியல் பிரிவை கடந்த 2016-ம் ஆண்டு உருவாக்கியது. சிவசேனா மற்றும் சம்பாஜி பிரிகடே கூட்டணி தடையின்றி செயல்பட ஒருங்கிணைப்பு குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

இந்த நிலையில் இந்த கூட்டணி குறித்த நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த பா.ஜனதா மாநில தலைவர் சந்திரசேகர் பவான்குலே, "உத்தவ் தாக்கரேவுடன் எந்த முக்கிய கட்சியும் கைகோர்க்க தயாராக இல்லை. எனவே கடந்த சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை கூட காப்பாற்றிக்கொள்ள முடியாத ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது" என்றார்.

------------

1 More update

Next Story