மும்பை அருகே அதிர்ச்சி சம்பவம்; எக்ஸ்பிரஸ் ரெயிலில் போலீஸ் அதிகாரி, 3 பயணிகள் சுட்டுக்கொலை - ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் வெறிச்செயல்


மும்பை அருகே அதிர்ச்சி சம்பவம்;  எக்ஸ்பிரஸ் ரெயிலில் போலீஸ் அதிகாரி, 3 பயணிகள் சுட்டுக்கொலை - ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 1 Aug 2023 12:45 AM IST (Updated: 1 Aug 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

மும்பை அருகே ஓடும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 3 பயணிகளை சுட்டுக்கொலை செய்த பயங்கர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை,

மும்பை அருகே ஓடும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 3 பயணிகளை சுட்டுக்கொலை செய்த பயங்கர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெய்பூர்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருந்து நேற்று முன்தினம் மதியம் 2.01 மணிக்கு ஜெய்பூர் - மும்பை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:12956) புறப்பட்டது. அந்த ரெயில் நேற்று அதிகாலை 2.47 மணிக்கு குஜராத் மாநிலம் சூரத் வந்தடைந்தது. சூரத் வந்தவுடன் பாதுகாப்பு பணிக்காக ரெயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் திகா ராம் மீனா (வயது56), சேத்தன் சிங் (34) உள்ளிட்ட 3 போலீஸ்காரர்கள் அந்த ரெயிலில் ஏறினர். ரெயில் மும்பை வந்து சேரும் வரை பாதுகாப்பு பணியில் இருப்பது அவர்களின் பொறுப்பாகும். அதிகாலை 4 மணியளவில் எக்ஸ்பிரஸ் ரெயில் குஜராத் மாநிலம் வாபி வந்தடைந்தது. பின்னர் அங்கு இருந்து 4.08 மணிக்கு ரெயில் புறப்பட்டுள்ளது.

ஓடும் ரெயிலில் பயங்கரம்

அதிகாலை 5 மணியளவில் ரெயில் மும்பை அருகே உள்ள பால்கர் பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அப்போது ஏ.சி. பெட்டியில் பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் சேத்தன் சிங் திடீரென தான் வைத்திருந்த தானியங்கி துப்பாக்கியால் தனது மேல் அதிகாரியான உதவி சப்-இன்ஸ்பெக்டர் திகா ராம் மீனாவை சுட்டார். இதில் குண்டு பாய்ந்து அவர் இருந்த இருக்கையிலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு தூங்கி கொண்டு இருந்த பயணிகள் பலர் திடுக்கிட்டு எழுந்தனர். அப்போது அதே பெட்டியில் பயணம் செய்த பயணி ஒருவரை கண்மூடித்தனமாக சுட்டார். இதில் அவரும் உயிரிழந்தார். ரத்த வெறி பிடித்த சேத்தன் சிங் உடனடியாக அருகில் உள்ள பெட்டிக்கு ஓட்டம் பிடித்தார். அங்கு இருந்த ஒரு பயணியையும், அருகே உள்ள பேண்டரி கார் (உணவகம்) பெட்டியில் இருந்த மற்றொரு பயணியையும் குருவியை போல சுட்டு தள்ளினார். இதில் அவர்கள் இருவரும் பலியானார்கள். ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் சுட்டதில் 4 பேர் பலியான சம்பவத்தால் ரெயில் பெட்டிகள் போர்களம் போல மாறின. மற்ற பயணிகள் பீதியில் உறைந்தனர்.

பாதுகாப்பு படை வீரர் கைது

மும்பை தகிசர் ரெயில் நிலையம் அருகே வந்த போது அபாய சங்கிலி இழுக்கப்பட்டதால் ரெயில் நிறுத்தப்பட்டது. 4 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படை வீரர் சேத்தன் சிங் ரெயிலில் இருந்து இறங்கி ஓட்டம்பிடித்தார். இதுதொடர்பாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரெயில்வே போலீசார் மிரா ரோடு பகுதியில் சேத்தன் சிங்கை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இந்தநிலையில் ரெயில் போரிவிலி ரெயில் நிலையம் வந்தவுடன் உயிரிழந்த 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக காந்திவிலி அம்பேத்கர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுட்டுக்கொல்லப்பட்ட பயணிகளின் பெயர் அப்துல் முகமது உசேன் (48), அக்தார் அப்பாஸ் அலி (48), சுதார் முகமது உசேன் என்று தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரணம் என்ன?

உதவி சப்-இன்ஸ்பெக்டர் திகா ராம் மீனாவுக்கும், வீரர் சேத்தன் சிங்கிற்கும் ஏற்கனவே பணியின் போது தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தின் போது முதலில் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் இதை தொடர்ந்து சேத்தன் சிங், திகா ராம் மீனாவை சுட்டதாகவும், பின்னர் தப்பிக்க முயன்ற போது தன்னை பிடிக்க முயன்ற பயணிகளையும் அவர் சுட்டதாக கூறப்படுகிறது. எனினும் திகா ராம் மீனாவுக்கும், சேத்தன் சிங்கிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படும் தகவலை போலீசார் மறுத்து உள்ளனர்.

உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்

ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் சேத்தன் சிங்கின் சொந்த ஊர் உத்தரபிரதேச மாநிலம், ஹத்ராஸ் பகுதி ஆகும். அவர் மும்பை லோயர் பரேல் ரெயில்வே பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். பலியான உதவி சப்-இன்ஸ்பெக்டர் திகா ராம் மீனா மும்பை தாதரில் பணியாற்றி வந்தவர். சொந்த ஊர் ராஜஸ்தான் ஆகும். இவர்கள் உள்பட 4 ரெயில்வே பாதுகாப்பு படையினர் சம்பவத்தன்று மும்பை தாதர் - போர்பந்தர் சவுராஷ்டிரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சூரத் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் அங்கு இருந்து ஜெய்பூர் - மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போது இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

மனநலம் பாதிப்பு

உதவி சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வீரருக்கு மனநல பிரச்சினை இருந்ததாகவும், அவர் மிகவும் உணர்ச்சிவசப்படுபவர் என்றும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். ஓடும் ரெயிலில் ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் உதவி சப்-இன்ஸ்பெக்டர், 3 பயணிகளை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


1 More update

Next Story