ரூ.100-க்கு சிறப்பு ரேசன் பொருட்கள்- மந்திரிசபை ஒப்புதல்

குடிபட்வா, அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு மானிய விலையில் ரூ.100-க்கு சிறப்பு ரேசன் பொருட்களை வினியோகிக்க மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.
மும்பை,
குடிபட்வா, அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு மானிய விலையில் ரூ.100-க்கு சிறப்பு ரேசன் பொருட்களை வினியோகிக்க மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.
உணவு பொட்டலம்
குடிபட்வா வருகிற மார்ச் மாதம் 22-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதேபோல அம்பேத்கர் ஜெயந்தி ஏப்ரல் 14-ந் தேதி வருகிறது.
இதையொட்டி "ஆனந்தாச்சா ஷிதா" என்று பெயரிடப்பட்ட ரேசன் பொருட்கள் அடங்கிய பொட்டலத்தை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின்படி தகுதியான ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் மத்திய அரசின் அந்தியோதயா திட்டத்தின் பயனாளிகளுக்கு தலா ஒரு கிலோ சமையல் எண்ணெய், ரவை, சென்னா பருப்பு மற்றும் சர்க்கரை ஆகியவற்றை ரூ.100-க்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு மந்திரி சபை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உணவு பொருட்கள் அடங்கிய பொட்டலம் குடி பட்வா மற்றும் அம்பேத்கர் ஜெயந்தி அன்று மக்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளது. ஏறக்குறைய 1 லட்சத்து 63 ஆயிரம் தகுதியான ரேஷன் கார்டுதாரர்கள் இதன்மூலம் பயன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
14 மாவட்டங்கள்
அவுரங்காபாத் மற்றும் அமராவதி மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள், நாக்பூர் மண்டலத்தில் உள்ள வார்தா மாவட்டம் ஆகிய தற்கொலை அதிகம் நடக்கும் 14 மாவட்டங்களில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் "ஆனந்தாச்சா ஷிதா" உணவு பொருட்கள் அடங்கிய பொட்டலங்கள் வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு தீபாவளியின் போதும் இதேபோன்ற உணவு பொருட்கள் வினியோகிக்கப்பட்டது. ஆனால் குறைவான நபர்களுக்கே உணவுப்பொருள் வினியோகிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
பிரவரா அணை
அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள பிரவரா அணை கட்ட மதிப்பீட்டு தொகை மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி மாற்றியமைக்கப்பட்ட செலவு தொகை ரூ.5 ஆயிரத்து 177 கோடியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கும் மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த அணை கட்டி முடிக்கப்பட்டால் கிட்டத்தட்ட 68 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் நேரடி பாசன வசதி பெறும். நாசிக் மாவட்டத்தை சேர்ந்த சங்கம்னர், அகோலா, ரசூரி, ரஹதா, கோபர்கான் மற்றும் சின்னார் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் பயன் அடைவார்கள்.






