' குஜராத், ராஜஸ்தான் மக்களை வெளியேற்றினால் மும்பை நாட்டின் நிதி தலைநகராக இருக்காது' - கவர்னர் சர்ச்சை பேச்சுக்கு கடும் எதிர்ப்பு

குஜராத், ராஜஸ்தான் மக்களை மராட்டியத்தில் இருந்து வெளியேற்றி விட்டால் மும்பை நகர், நாட்டின் நிதி தலைநகரமாக இருக்காது என கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் மன்னிப்பு கேட்க அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
மும்பை,
குஜராத், ராஜஸ்தான் மக்களை மராட்டியத்தில் இருந்து வெளியேற்றி விட்டால் மும்பை நகர், நாட்டின் நிதி தலைநகரமாக இருக்காது என கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் மன்னிப்பு கேட்க அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
கவர்னர் சர்ச்சை பேச்சு
மராட்டியத்தில் கவர்னராக இருக்கும் பகத்சிங் கோஷ்யாரி, முந்தைய உத்தவ் தாக்கரே அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில் அவர் நேற்று இரவு மும்பை அந்தேரி பகுதியில் நடந்த சவுக் (சாலை சந்திப்பு) பெயர் பலகை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் மும்பை மற்றும் மராத்தி மக்கள் பற்றி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக கவர்னர் பேசுகையில், "நான் இங்கு உள்ளவர்களிடம் கூறுகிறேன், மராட்டியத்தில் இருந்து குறிப்பாக மும்பை, தானேயில் இருந்து குஜராத் மற்றும் ராஜஸ்தான் மக்களை வெளியேற்றினால், உங்கள் கையில் பணமே இருக்காது. மும்பை நகர், நாட்டின் நிதி தலைநகராக இருக்காது" என்றார்.
கண்டனம்
இது மராட்டிய மக்களையும், மும்பை நகரையும் அவமதிப்பதாக அரசியல் கட்சிகள் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கவர்னர் தனது பேச்சுக்கு மராட்டிய மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளன.
பகத்சிங் கோஷ்யாரியை வீட்டுக்கு அனுப்புவதா அல்லது சிறைக்கு அனுப்புவதா என்பதை முடிவு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே காட்டமாக கூறினார். கவர்னரின் இந்த பேச்சை ஏற்க முடியாது என்று கூறிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, "கோஷ்யாரியின் கருத்துக்களில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அவர் அரசியல் சாசன பதவியை வகிக்கிறார், மேலும் அவரது செயல்கள் மற்றவர்களை அவமதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இதேபோல பா.ஜனதா மூத்த தலைவரும், துணை முதல்-மந்திரியுமான தேவேந்திர பட்னாவிசும் கவர்னரின் பேச்சை ஏற்கவில்லை என்று கூறியுள்ளார்.
கவர்னர் விளக்கம்
இந்தநிலையில் கவர்னரின் பேச்சு திரித்து கூறப்பட்டு இருப்பதாக ராஜ்பவன் தெரிவித்து உள்ளது.
மும்பையை உருவாக்கியதில் குஜராத்தி, ராஜஸ்தானிகளின் பங்களிப்பு பற்றி மட்டுமே கவர்னர் பேசியதாக கூறியுள்ள ராஜ்பவன், அவரது பேசியது பற்றி அளித்துள்ள விளக்கத்தில், " மும்பை மராட்டியத்தின் பெருமை. நாட்டின் நிதி தலைநகர். மராத்தியர்களை அவமதிக்கும் கேள்விக்கே இடமில்லை. எல்லாவற்றையும் அரசியலாக பார்ப்பதால் எனது பேச்சு திரித்து கூறப்பட்டு உள்ளது. ஒரு சமூகத்தினரை பாராட்டுவது, மற்றவர்களை அவமதிப்பது என்று அர்த்தமில்லை. அரசியல் கட்சிகள் தேவையில்லாத சர்ச்சைகளை ஏற்படுத்த கூடாது" என்று தெரிவித்துள்ளார்.






