பள்ளியில் பயிற்சியின்போது ஈட்டிபாய்ந்து மாணவன் பலி
தனியார் பள்ளியில் விளையாட்டு பயிற்சியின் போது ஈட்டி பாய்ந்து 10-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை,
தனியார் பள்ளியில் விளையாட்டு பயிற்சியின் போது ஈட்டி பாய்ந்து 10-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈட்டி தலையில் பாய்ந்தது
ராய்காட் மாவட்டம் மன்காவ் தாலுகா புரார் பகுதியில் உள்ள தனியார் ஆங்கில பள்ளியில் குஜேபா தாவ்ரே (வயது15) என்ற மாணவன் 10-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் வட்டார அளவிலான போட்டிக்காக மாணவர்கள் ஈட்டி எறிதல் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். மாணவன் குஜேபா தாவ்ரேவும் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு இருந்தான்.
மதியம் 12.30 மணி அளவில் மாணவன் குஜேபா தாவ்ரே 'ஷூ' கயிறை கட்ட கீழே குனிந்தான். அந்த நேரத்தில் மற்றொரு மாணவன் எறிந்த ஈட்டி தூரத்தில் இருந்து பாய்ந்து வந்தது. கீழே குனிந்து இருந்த குஜேபா தாவ்ரே தன்னை நோக்கி வந்த ஈட்டியை கவனிக்கவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் ஈட்டி மாணவனின் தலையில் பாய்ந்தது.
மாணவன் பலி
படுகாயமடைந்த மாணவனை ஆசிரியர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவன் குஜேபா தாவ்ரேயை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
சம்பவம் குறித்து போலீசார் விபத்து வழக்குப்பதிவு செய்து உள்ளனர். கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த பின்னர் அலட்சியம் எதுவும் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
விளையாட்டு பயிற்சியின்போது ஈட்டி பாய்ந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.