கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியுடன் சுப்பிரமணிய சாமி சந்திப்பு

கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி சந்தித்து பேசினார்.
மும்பை,
கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி சந்தித்து பேசினார்.
கவர்னருடன் சந்திப்பு
முன்னாள் எம்.பி.யும் பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான சுப்பிரமணிய சாமி, கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை நேற்று சந்தித்து பேசினார். மும்பையில் உள்ள ராஜ்பவனில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்ததாக கவர்னர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, சத்ரபதி வீரசிவாஜியை இழிவுபடுத்தி விட்டதாக மகா விகாஸ் அகாடி கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. கவர்னரை திரும்பப் பெற வேண்டும் என நேற்று முன் தினம் பிரமாண்ட பேரணியும் சிவசேனா (உத்தவ் தாக்கரே), காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகள் நடத்தின. இந்த நிலையில், தான் மராட்டிய கவர்னரை, சுப்பிரமணிய சாமி சந்தித்து பேசியிருக்கிறார்.
காரணம் என்ன?
மராட்டிய அரசு கோவில் நகரமான பண்டர்பூரில் சில மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக சில கோவில்கள், குடியிருப்புகள் இடிக்கப்பட வேண்டிய நிலை உள்ளது. பண்டர்பூர் மேம்பாட்டு திட்டத்துக்கு சுப்பிரமணிய சாமி எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
எனவே அந்த விவகாரம் தொடர்பாக அவர் கவர்னரை சந்தித்து பேசி இருக்கலாம் என கூறப்படுகிறது.






