சிவசேனா கட்சியின் மக்களவை கொறடா திடீர் மாற்றம்- உத்தவ் தாக்கரே அதிரடி


சிவசேனா கட்சியின் மக்களவை கொறடா திடீர் மாற்றம்- உத்தவ் தாக்கரே அதிரடி
x

சிவசேனாவை சேர்ந்த எம்.பி.க்களில் ஒரு பகுதியினர் ஷிண்டே அணிக்கு தாவ இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தனது கட்சியின் மக்களவை கொறடாவை திடீரென மாற்றி உத்தவ் தாக்கரே நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

மும்பை,

சிவசேனாவை சேர்ந்த எம்.பி.க்களில் ஒரு பகுதியினர் ஷிண்டே அணிக்கு தாவ இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தனது கட்சியின் மக்களவை கொறடாவை திடீரென மாற்றி உத்தவ் தாக்கரே நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

ஷிண்டே அணி

சிவசேனாவில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் கட்சிக்கு எதிராக திரும்பியதால், அந்த கட்சி தலைமையில் இயங்கி வந்த அரசு கவிழ்ந்தது. சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்து கடந்த மாதம் 30-ந் தேதி ஆட்சியை பிடித்தார்.

சிவசேனாவில் மொத்தம் உள்ள 55 எம்.எல்.ஏ.க்களில் 40 பேர் ஏக்நாத் ஷிண்டேக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இதனால் நாங்கள் தான் உண்மையான சிவசேனா என ஷிண்டே அணியினர் கூறி வருகின்றனர்.

அணி மாற தயாராகும் எம்.பி.க்கள்

இந்த நிலையில் எம்.பி.க்களும் சிவசேனா தலைமைக்கு எதிராக திரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. சிவசேனாவில் மொத்தம் 18 எம்.பி.க்கள் உள்ளனர். கட்சியில் ஏற்பட்ட குழப்பத்தை தொடர்ந்து கடந்த வாரம் எம்.பி.க்கள் கூட்டத்தை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூட்டியிருந்தார்.

இதில் ஏக்நாத் ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்.பி. மற்றும் சிவசேனா கட்சியின் மக்களவை கொறடாவான பாவனா காவ்லி எம்.பி. ஆகிய இருவரும் கூட்டத்தை புறக்கணித்தனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.பி.க்களில் பலர் ஷிண்டே அணியுடன் ஒத்துப்போக வேண்டும் என்ற மனநிலையை வெளிப்படுத்தியதாக தகவல் வெளியானது.

எம்.பி. எழுதிய கடிதம்

இதற்கு மத்தியில் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா கூட்டணி நிறுத்தியுள்ள வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு சிவசேனா எம்.பி.க்கள் வாக்களிக்க உத்தரவிட வேண்டும் என்று நேற்று மும்பையை சேர்ந்த ராகுல் செவாலே எம்.பி.. அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேக்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்தநிலையில் 18 எம்.பி.க்களில் 12 எம்.பி.க்கள் தங்களது அணிக்கு விரைவில் வருவார்கள் என்று ஷிண்டே அணியை சேர்ந்த முன்னாள் மந்திரி குலாப்ராவ் பாட்டீல் தெரிவித்தார்.

கொறடா திடீர் மாற்றம்

இந்த பரபரப்பை தொடர்ந்து சிவசேனா கட்சியின் மக்களவை கொறடாவாக இருந்த பாவனா காவ்லி இன்று அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக தானே தொகுதி எம்.பி.யான ராஜன் விஜாரேயை புதிய கொறடாவாக தேர்வு செய்து இருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷிக்கு, சிவசேனா நாடாளுமன்ற குழு தலைவர் சஞ்சய் ராவத் கடிதம் அனுப்பி உள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் சிவசேனா எம்.பி.க்களில் ஒரு பகுதியினர் ஏக்நாத் ஷிண்டே அணியை ஆதரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தநிலையில் உத்தவ் தாக்கரே தனது கட்சியின் மக்களவை கொறடாவை மாற்றி அமைத்து அதிரடி காட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

----------------------------

1 More update

Next Story