கூட்ட நெரிசல் காரணமாக முதல்-மந்திரி அலுவலகம் திடீரென மூடப்பட்டதால் பரபரப்பு

மந்திராலயாவில் உள்ள முதல்-மந்திரி அலுவலகம் கூட்ட நெரிசல் காரணமாக திடீரென மூடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை,
மந்திராலயாவில் உள்ள முதல்-மந்திரி அலுவலகம் கூட்ட நெரிசல் காரணமாக திடீரென மூடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசாருடன் வாக்குவாதம்
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் அலுவலகம் மந்திராலயாவின் 6-வது மாடியில் அமைந்து உள்ளது. இவரது அலுவலகத்தில் தினசரி அலுவல் தொடர்பாக கோப்புகளில் கையெழுத்து பெற எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள், பார்வையாளர்கள் அங்கு கூடுவது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆளும் கட்சி எம்.எல்.ஏ சந்தோஷ் பங்கார் தனது ஆதரவாளர்களுடன் மந்திராலயாவில் திரண்டார் அங்கு நுழைவு வாயிலில் பதிவேட்டில் தங்கள் பெயர்களை எழுத சொன்னதை தொடர்ந்து அவர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருடன் வாக்குவாதம் செய்தார்.
அலுவலகம் திடீர் மூடல்
பின்னர் 6-வது மாடியில் முதல்-மந்திரியின் அலுவலகத்திற்கு சென்ற போது கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் அதிகாரிகள் நெரிசலை தவிர்க்க முதல்-மந்திரி அலுவலகத்தை உள்பக்கமாக பூட்டினர். இதனால் பார்வையாளர்கள் மட்டுமின்றி அதிகாரிகள் கூட உள்ளே செல்ல முடியாமல் தவித்தனர். பின்னர் ½ மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் முதல்-மந்திரி அலுவலகத்தின் கதவுகள் திறக்கப்பட்டது. இது தொடர்பாக முதல்-மந்திரி அலுவலக அதிகாரியை தொடர்பு கொண்ட போது கூட்ட நெரிசல் காரணமாக தான் கதவு மூடப்பட்டதாக விளக்கம் அளித்தார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.






