ஆரேகாலனியில் இனி மரங்களை வெட்டினால் கடும் நடவடிக்கை- மெட்ரோ ரெயில் கழகத்துக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


ஆரேகாலனியில் இனி மரங்களை வெட்டினால் கடும் நடவடிக்கை- மெட்ரோ ரெயில் கழகத்துக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x

ஆரேகாலனியில் இனி மரங்களை வெட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரோ ரெயில் கழகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மும்பை,

ஆரேகாலனியில் இனி மரங்களை வெட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரோ ரெயில் கழகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மரம் வெட்ட எதிர்ப்பு

மும்பை ஆரே காலனி பகுதியில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைக்க மரங்களை வெட்ட முந்தைய தேவேந்திர பட்னாவிஸ் அரசு முடிவு செய்தது.

ஆனால் இதற்கு பசுமை ஆர்வலர்கள் மற்றும் மும்பையை சேர்ந்த பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மரங்களை வெட்டுவதால் மும்பையில் ஒரே ஒரு பசுமை பகுதியாக கருதப்படும் ஆரே காலனி பாதிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசு ஆரேகாலனி பணிமனை திட்டத்தை கைவிட்டது. ஆனால் தற்போது ஆட்சி மாறியதும், காட்சியும் மாறிவிட்டது. மீண்டும் ஆரே காலனியில் பணிமனை அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

நீதிபதிக்கு கடிதம்

இந்தநிலையில் ஆரேகாலனியில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு தடை கோரி சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் 2019-ம் ஆண்டு அப்போதைய இந்திய தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு ஆரே காலனி தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மராட்டிய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், ஆரேகாலனியில் இனி மரங்கள் வெட்டப்படமாட்டாது என்று உறுதி அளித்தார்.

கடுமையான நடவடிக்கை

இதையடுத்து ஆரே காலனியில் இனி மரங்கள் வெட்டப்பட மாட்டாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (எம்.எம்.ஆர்.சி.எல்) நிறுவன அதிகாரிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், "எம்.எம்.ஆர்.சி.எல். ஆரேகாலனியில் எந்த வகையிலும் மரங்கள் வெட்டப்பட மாட்டாது என பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. எம்.எம்.ஆர்.சி.எல். இயக்குனரால் வழக்குப்பட்ட உறுதி மொழி ஏற்கனவே பதிவு செய்யப்பட வேண்டும். இந்த உறுதிமொழிக்கு கட்டுப்பட்டு எம்.எம்.ஆர்.சி.எல். நடந்துகொள்ளும் என்று நம்புகிறோம். இதை மீறினால் கடுமையான நடவடிக்கையை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படும்" என்றனர்.


Next Story