கட்டிட பணியால் மாற்றப்பட்ட நிலையில் மீண்டும் பழைய பள்ளிக்கு திரும்பிய தமிழ் மாணவர்கள்

மும்பை மலாடு வல்லனை காலனியில் கட்டிட பணியால் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்ட தமிழ் மாணவர்கள் மீண்டும் பழைய பள்ளிக்கு திரும்பினர்
மும்பை,
மலாடு மேற்கு, ஒர்லம் வல்லனை காலனியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், 4 ஆண்டுகளுக்கு அந்த பள்ளியில் படித்த மாணவர்கள் காந்திவிலியில் உள்ள பள்ளிக்கு மாற்றப்பட்டனர். நடப்பு கல்வி ஆண்டில் ஒர்லம் வல்லனை காலனி மாநகராட்சி பள்ளியில் கட்டுமான பணிகள் முடிந்து மீண்டும் அங்கு பள்ளி செயல்பட தொடங்கியது. இதில் காந்திவிலி பள்ளியில் படித்த இந்தி, மராத்தி வழிக்கல்வி மாணவர்கள் மட்டுமே மீண்டும் வல்லனை காலனி பள்ளிக்கு மாற்றப்பட்டனர். தமிழ் வழிக்கல்வி மாணவர்கள் தொடர்ந்து காந்திவிலி பள்ளியிலேயே படித்து வந்தனர். இதுதொடர்பாக மலாடு தமிழர் நலச்சங்கத்தினர் கேப்டன் தமிழ்செல்வன் எம்.எல்.ஏ.வை சந்தித்து பேசினர். கேப்டன் தமிழ்செல்வன் தமிழ் வழிக்கல்வி மாணவர்களை மீண்டும் வல்லனை காலனி பள்ளிக்கு மாற்றுவது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகாலை சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து காந்திவிலி பள்ளியில் செயல்பட்டு வந்த தமிழ் வழிக்கல்வி வகுப்புகள் மீண்டும் ஒர்லம் வல்லனை காலனி மாநகராட்சி பள்ளியின் புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. மீண்டும் பழைய பள்ளிக்கு மாறிய தமிழ் வழிக்கல்வி மாணவர்களுக்கு மலாடு தமிழர் நலச்சங்கம் சார்பில் வரவேற்பு விழா நடந்தது. விழாவில் சங்க தலைவர் பாஸ்கரன், முன்னாள் கவுன்சிலர் சேசல் தேசாய், சங்கல்ப் சர்மா, மாரியப்பன், பொன்பாண்டி, ராஜபால், ஆரோக்கியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் காந்திவிலியில் இருந்து மீண்டும் ஒர்லம் வல்லனை காலனி பள்ளி கட்டிடத்துக்கு தமிழ் வழிக்கல்வி மாணவர்களை மாற்ற உதவி செய்த சங்க தலைவர் பாஸ்கரனுக்கு தமிழ் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.






