ஆசன வாயில் 'ஏர்பம்ப்' காற்றை செலுத்தியதில் வாலிபர் பலி- துலே அருகே பரிதாபம்

துலே அருகே தொழிற்சாலை ஊழியர் விளையாட்டாக ஆசன வாயில் ‘ஏர் பம்ப்’பை செலுத்தியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மும்பை,
துலே அருகே தொழிற்சாலை ஊழியர் விளையாட்டாக ஆசன வாயில் 'ஏர் பம்ப்'பை செலுத்தியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஏர் பம்ப் விபரீதம்
துலே மாவட்டம் நிசாம்பூரில் தொழிற்சாலையில் துஷார் சதாசிவ்(வயது20) என்ற வாலிபர் வேலைபார்த்து வந்தார். ஆலையில் தொழிலாளர்களின் ஆடை மற்றும் உடலில் ஒட்டி உள்ள உலோக துகள்களை அகற்ற ஏர்பம்ப் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவத்தன்று உணவு இடைவேளையின் போது தொழிலாளர்கள் ஏர் பம்ப் மூலம் உடலில் ஒட்டியுள்ள உலோக துகள்களை அகற்றி கொண்டு இருந்தனர்.
அப்போது ஒரு தொழிலாளி விளையாட்டாக, ஏர்பம்ப் காற்றை துஷார் சதாசிவின் ஆசன வாயில் செலுத்தினார். இதனால் காற்று வேகமாக உடலுக்குள் புகுந்து வாலிபரின் வயிற்றுப்பகுதி உறுப்புகள் சேதமடைந்தன.
சிகிச்சை பலனின்றி பலி
உடனடியாக அவர் நந்துர்புரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் அவர் சிகிச்சை பலன்இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த நிசாம்புர் போலீசார் வாலிபரின் மரணத்துக்கு காரணமான 28 வயது தொழிலாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






